Sunday, 25 January 2015

ஆயிஷா நடராஜன் எனும் குரு வாசகன்

கல்வி ஆர்வலர்களின் மத்தியில் மரியாதைக்குரிய பெயர் ஆயிஷா இரா.நடராஜன்.

ஐந்து வருடங்களுக்கு முன் ஏதேச்சையாக கிடைத்த ஆயிஷா புத்தகத்தை ஒரு திருமண மண்டபத்தில் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் படிக்கத் தொடங்கினேன்.

படிக்க படிக்க நான் எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து விட்டு ஆயிஷாவின் பக்கத்தில் இருந்து அவள் வாழ்க்கையை பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

படித்து முடித்த பொழுதுதான் தெரிந்தது நான் கண்ணீர் வழிய உட்கார்ந்திருக்கிறேன். அடக்க முடியாமல் சிந்திக்கொண்டிருக்கும் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நிமிராமலே நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு ஆயிஷா நடராஜன் அவர்களின் அத்தனை புத்தகங்களும் என் மனதிற்குள்ளும் என் அலமாரிக்குள்ளும் புகுந்து கொண்டன.

ஆயிஷாவை படித்து விட்டு குறைந்த பட்சம் ஆயிரம் ஆசிரியர்களிடமாவது அதைப்பற்றி பேசியிருப்பேன். ஒரு நல்ல புத்தகம் இப்படித்தான் நம்மை செயல்பட வைக்கும்.

அதேதான் நடந்திருக்கிறது ஆயிஷா நடராஜனுக்கும் .தான் படித்த சிறந்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் பிறந்ததுதான் இந்த அயல் மொழி அலமாரி புத்தகம்.

அவர் அலமாரியில் உள்ள அயல் மொழி புத்தகங்களை நமக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகிறார். நிச்சயம் அந்தப் புத்தகம் நம் அலமாரியிலும் ஏறும் விதமாக. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அள்ளி அணைத்துக்கொள்ளும் புத்தகங்களை அழகாக அறிமுகப்படுத்துகிறார்.

நாம் மீனை பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக மட்டுமல்ல மீன் நம்மை பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக அது வட்ட கண்ணாடிக் குவளையில் வளர்ப்பது தடை செய்யப்படுகிறது ( அத்தகைய அமைப்பில் மீனுக்கு நாம் விகாரமாக தெரிவோம் என்பதால் ) என்பதை படிக்கிறபோது ஆச்சரியமாக இருக்கிறது.

100 வித புத்தகங்களை வாசித்து முடித்தபோது கிடைக்கிற மகிழ்ச்சியை இந்த ஒரு புத்தகம் தந்துவிடுகிறது. 100 புத்தகங்களின் வாசிப்பு அனுவத்தை ஒரு புத்தகத்திலேயே ஏற்படுத்தியதற்காக நன்றி, நடராஜன் அவர்களுக்கு.

ஒரு புத்தகத்தை பற்றி பேசும்போது அதன் சிறப்பை சொல்வதற்காக அதே போல வந்துள்ள ஒரு பத்து புத்தகங்களையாவது ஒப்பிட்டுவிடுகிறார். வேறு வேலையே இல்லாமல் புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்தால் கூட இவ்வளவு புத்தகங்களை படித்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

ஒரு கல்வி நிறுவனத்தில் முதல்வராக இருந்துகொண்டு கல்விச்சார்ந்த செயல்பாடுகளில் இருந்துகொண்டு நிறைய புத்தகங்களை எழுதிக்கொண்டு இத்தனைக்கும் நடுவில் நிறைய வாசித்துக்கொண்டும் இருப்பதால் இவரை விடச்சிறந்த முன்மாதிரி, மாணவர்களுக்கு கிடைத்துவிட மாட்டார்கள்.

கணிதப்பிசாசுகள் என்ற தலைப்பில் உள்ள நூல் அறிமுகங்கள் நம்மை கணித காதலராக்குகிறது. புத்தகம் பிரிப்போம் சிறகை விரிப்போம் எல்லோரையும் தேச நேசராக்குகிறது.

யுத்தக்காலத்தில் எழுதப்பட்ட 13 குழந்தைகளின் டைரி தொகுப்பு ‘ஸ்டோலன் வாய்சஸ்.’ யுத்தங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி எழுதுகிறாள், “எல்லாம் வல்லவரான கடவுளே... இந்தப் பெரிய சண்டையில் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் எனபதைப் பலரும் விவாதிக்கிறார்கள்.. நீங்கள் இருக்கிறீர்களா என்பதே எனக்கு கேள்விக்குறியாக இருக்கிறது.” 

குரு வாசகன்

வாசிக்காத ஆசிரியர்களை பில்லி ஹாப்கின்ஸ் தனது ஹை ஹோப்ஸ் நாவலில் மலட்டு மாமிச கோழிகள் என்று அழைக்கிறார்.   தனது துறை சார்ந்து மட்டுமே வாசிப்பவர்கள் மரப் பொந்தின் அணில் போன்றவர்கள்.. மேலேயே வாசித்து வாழ்ந்து விடுவார்கள். இருக்கும் இடத்தில் வந்து சேருவதை வாசிக்கும் ஆசிரியர்கள் கிணற்று மீன்கள் என்கிறார்.

இதில் நீங்கள் யார் ? என்று ஆசிரியர்களிடம் கேட்பதற்காக, ஆயிஷா போலவே இதையும் குறைந்தபட்சம் ஒரு ஐந்தாயிரம் ஆசிரியர்களிடாமவது, இந்தக் கட்டுரையை அச்சிட்டுக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டம் வைத்துள்ளேன்.

உங்களுக்கு இதயம் இருக்கிறதா? கட்டுரையை படித்து முடிக்கும்போது உங்கள் இதயம் இன்னும் விரிந்து இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும் உங்கள் உறாவாக உணர வைக்கிறது.

புத்தகத்தை படித்து முடிக்கும்போது நமக்கு ஏற்படும் பிரமிப்பு இவர் சுவாசித்தபடியே வாழ்ந்தாரா? இல்லை வாசித்தபடியே வாழ்ந்தாரா? என்பதுதான். இப்படி ஒரு வாழ்க்கை நமக்கும் வாய்க்க வேண்டும். அதை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்த உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த நூலின் வெற்றி.

Sunday, 18 January 2015

கமர்கட் கதைகள்

கமர்கட் வைத்துக்கொண்டு சுற்றுபவர் விஷ்ணுபுரம் சரவணன் நாம் இழந்த சுவையை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக.  அவர் எழுத்தும் அப்படித்தான்.

கமர்கட்டை கடித்து சாப்பிடக்கூடாது. வாயின் ஒரத்தில் அதக்கிக்கொள்ள வேண்டும்..  மெல்ல மெல்ல கரைந்து அந்த இனிப்பு நமக்குள் இறங்கிக்கொண்டிருக்கும்.

கமர்கட்டின் சுவையறிய ஒன்று அதை வாங்கிச் சாப்பிடுங்கள். அல்லது விஷ்ணுபுரம் சரவணனின் வாத்து ராஜா புத்தகத்தை படியுங்கள். இல்லை இல்லை பக்கத்தில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு படித்து சொல்லுங்கள். அப்போதுதான் கமர்கட் அனுபவம் கிடைக்கும்.

அணில் பேசுமா? அது நமக்கு கேட்குமா?

அதைக் கேட்கிற பிரேத்யகமான காதுகள் நமக்கு இருந்தால் கேட்கும். அப்போது கொய்யா எங்கே பழுத்திருக்கும் என்று அணில் நமக்கு சொல்லித்தரும்.

அமுதா ஒரு நாள் தவறாமல் செய்கிற வேலை சுடுகாய்களை அள்ளி குளத்தில் எறிவதுதான். யாருக்கும் சூடுபட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற குழந்தை மனங்களை விஷ்ணுபுரம் சரவணன் போகிற போக்கில் பதிவு செய்து விட்டு போகிறார்.

யாருக்கும் சூடுபட்டுவிடக்கூடாது என்று நினைக்கிற அமுதாவை டீச்சர் சொல்லினால் சுடுகிறார். மண்ணில் முழங்கால் போடச் சொல்கிறார். இந்த டீச்சர்களுக்கெல்லாம் வெல்லம் கொடுக்கலாம். அப்போதாவது குழந்தைகளிடம் இனிப்பாக பேசுவார்கள். அமுதாவை கேட்டால் அவள் அப்படித்தான் சொல்வாள்.

கதையில் வரும் அமுதாவைப்போலவே எல்லாக்குழந்தைகளும் கதையை தேடி ஒடிக்கொண்டிருக்கின்றன. இது புரிந்ததால்தான் விஷ்ணுபுரம் சரவணன் கதைகளோடு குழந்தைகளை தேடி ஒடிக்கொண்டிருக்கிறார்.

நாளை வருவோம்.வாத்து முட்டைகளை காட்டனும் என்று காவலாளிகள் சொல்கிறார்கள். அப்புறம் என்னாச்சி? இந்த இடம் வருகிற போது சஸ்பென்ஸை குழந்தைகளால் பொறுமையாக கடக்க முடியுமா? என்னால் முடியவில்லை.
 
வாத்துக்களுக்கும் அதை நேசிக்கிற சுந்தரிக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனம் அடித்துக்கொள்கிறது.

டிரைனில் என் மகன் சதானந்துக்கு இதைப்படித்து சொல்லிக் கொண்டிருக்கும்போது பக்கத்திலிருந்த குழந்தைகள் ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொண்டன. காய்ந்து போய் இருந்த அந்தக்கண்களில் கதை வறட்சி தெரிந்தது.

ஒவியங்கள் வரைந்த ஒவியருக்கு வாழ்த்துக்கள் (பெயரே அதுதான். இப்படியெல்லாம் வைத்துக்கொண்டால் குழப்பம் வராதா? )

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை மலரச் செய்ய வேண்டும் என்றால் இதைப்படித்துச் சொல்லுங்கள். முழுவதுமாக படிக்க வேண்டும் என்று கூட இல்லை. இரண்டு பக்கத்தை படித்து விட்டு அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். குழந்தையாக இருந்தால் கூட எழுத்துக்கூட்டியாவது இதை படித்துவிடுவார்கள். கதை அப்படி.


எல்.கே.ஜி படிக்கும் என் மகள் சாதனா, விஷ்ணுபுரம் சரவணனை “என் ப்ரெண்ட்” என்கிறாள். ஏன் என்று இப்போது புரிகிறது.

என் மகளை கதை சொல்லச்சொன்னேன், விஷ்ணுபுரம் சரவணனின் ப்ரெண்ட் என்பதால். நம்ப முடியாததையெல்லாம் சொன்னாள்.

குழந்தைகள் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு நீங்கள் குழந்தைகளை நம்புகிறவர்களாக இருக்க வேண்டும். விஷ்ணுபுரம் சரவணனை போல...


மாணவர்களிடமிருந்து நல்லாசிரியர் விருது வேண்டுமா? இந்தப்புத்தகத்தை படியுங்கள்.


என் நண்பர் திரு ஶ்ரீரசா வரைந்த இந்தப்படம் என்ன சொல்கிறது? என்பது உங்களுக்கு புரிந்துவிட்டால் நீங்கள் இந்தப்புத்தகத்தை படிக்கும் அவசியம் இருக்காது.  இல்லையென்றாலோ நீங்கள் ஒரு ஆசிரியர் என்றாலோ உடனே 'ஆசிரிய முகமூடி அகற்றி..' புத்தகத்தை வாங்கி படித்து விடுங்கள்.

டீச்சர் மேன் என்கிற பிராங்க் மக்கோர்ட்டின் புத்தகத்தை வாசித்தபோது தனக்குள் கிளர்ந்த அனுவங்களை பதிவு செய்திருக்கிறார் பேரா. ச. மாடசாமி  ஆசிரிய முகமூடி அகற்றி..' . என்ற சிறிய நூலின் மூலம்.

வகுப்பை அமைதியாக வைத்திருப்பதே சிறந்த ஆசிரியருக்கான இலக்கணம் என்பதை மாற்றிய இலக்கியம் டீச்சர் மேன்.

மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் நடந்து சலித்த பாதையிலிருந்து விலக, விடுபட இந்நூலை வாசிப்பது இல்லை இல்லை மனப்பாடம் செய்வது அவசியம்.

மாணவர்கள் பார்வையால் அங்கீகரிக்கும் வகுப்புகளை எப்படி நடத்திக் காட்டினார் என்பது இதில் இருக்கிறது. இதை வாசித்தால் நூல் பிடித்து நிச்சயம் நீங்கள் டீச்சரை மேன் புத்தகத்தை தேடத் தொடங்குவீர்கள்.

எல்லா முகமூடிகளும் அசிங்கமானவைதான். ஆனால் நாம் சகித்துக்கொள்கிறோம். மாணவர்களால் அது முடிவதில்லை. அதனால் ஆசிரிய முகமூடிகள் மிகவும் அசிங்கமானதாகிறது. அதை பிடுங்கி எரிகிறது இந்தப்புத்தகம்..

ஒரு ஆசிரியருக்கு வகுப்பைறைக்குள் நுழைகிற முதல்நாள் கடினமான நாள் மட்டுமல்ல; முக்கியமான நாளும் கூட. முதல் நாளில் செய்யும் ஒரு தவற்றைச் சரிப்படுத்த மாதங்களாகும். ஆனால் இந்தப் புத்தகத்தை படித்தால் ஒரு சில நாட்கள் போதும். 

பேசத்தூண்டும் தொடக்கம் பகுதி, ஆசிரியர்களை செயல்படத் தூண்டும் தொடக்கமாக அமைகிறது..

"மாணவர்களிடம் கதை சொல்வதே பாடம் நடத்துவது மாதிரிதான்" 

"மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே"

"நீ அவர்களைப் பார்த்துக் கத்தினாலோ, திட்டினாலோ அவர்களை இழக்கிறாய். உன் சத்தத்துக்குப் பிறகு, சலனமற்று மௌனமாய் அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது உன்னைத்திருப்பி அடிப்பது போல. வகுப்பறை அத்துடன் முடிந்துவிட்டது."

இதெல்லாம் மக்கோர்ட் சொல்வது.

"வார்த்தைகளுக்கு கட்டுப்படாதவர்கள் வாய்ப்புகளுக்கு கட்டுப்படுவார்கள்."

"இன்னொரு உளியை  அந்தச் சிற்பம் ஏற்காது"   ...  இதெல்லாம் பேராசிரியர் ச.மா சொல்வது.

மாணவ மனங்களை புரிந்து கொள்வதில் இருவரும் சரிக்கு சமமாக இருக்கிறார்கள். பின்ன பேராசிரியர் ச.மா.  நம்ம ஊர் மக்கோர்ட் இல்லையா?

"மேலும் படிப்பது, பதவி உயர்வு பெறுவது எனத் தங்கள் வளர்ச்சி பற்றியே ஆசிரியர்கள் சிந்திப்பார்களானால், மாணவர்களுக்குக் கற்பிப்பது யார்?" என்ற கேள்வி ஆசிரியர்களை நோக்கி பிரம்பு போல நீள்கிறது.

"என் மகன் ரசித்து படிக்கிறானா?" என்று வித்தியாசமாக கேட்ட முதல் பெற்றோருக்கு மக்கோர்ட் நன்றி சொல்கிறார். நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும். ஒரு வேளை இந்தப்புத்தகம் அதற்கு உதவி செய்யலாம்.

புத்தகத்தை படித்து முடித்ததும் நான் டாய்லெட்டை சுத்தம் செய்ய எழுந்தேன். ஏன் என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிறகு நீங்களும் அப்படி செய்வீர்கள்.

Saturday, 17 January 2015

ஞாநியின் கையில் எத்தனை பலூன்கள்

அதிகாரப் போக்கிற்கு எதிரான கலவரத்தை கத்தியைக் கொண்டோ; இல்லை கத்திக்கொண்டோதான் செய்ய வேண்டும் என்றில்லை பலூனை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலம் செல்வதன் மூலம் கூட செய்யலாம் என்ற ஒரு வரியின் தொடர்ச்சிதான் இந்த நாடகம்.

அதிகாரம் எப்போதும் தனக்கு பயப்படாதவர்களை கண்டுதான் அதிகம் பயப்படுகிறது. அவர்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி உட்கார வைக்கப் பார்க்கிறது. அவர்கள் உட்காராமல் எழுந்து நின்று பேசினால் அது இப்படித்தான் இருக்கும் என்கிறது பலூன் நாடகம்.

நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகளை இப்போது நடப்பதாக நினைத்துப் பார்த்தால் கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் 1981 ல் இது எழுதப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஞாநியின் “தில்”லை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ஓ பக்கங்கள் நினைவில் வந்ததும் எனக்கு ஒரு சினிமா வசனமும் கூடவே வந்தது... “சார் அப்பவே அப்படி. இப்ப கேட்கவா வேணும்”.

புத்தகத்தின் அட்டையில் பெயர்கள் பழைய புத்தகத்திலிருந்து அப்படியே ஸ்கேன் செய்திருப்பதால் தெளிவற்று இருக்கிறது. அட்டை வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாடக உரையாடல்களில் வரும் வரிகள் எங்கேயிருந்து எடுத்தாளப்படுகிறது என்பதை அந்தந்த பக்கத்திலேயே கொடுத்திருக்கலாம். வரிகளால் ஈர்க்கப்படும்போது ஒவ்வொரு முறையும் கடைசிப்பக்கத்திற்கு ஒட வேண்டியிருக்கிறது.

இந்த தேசத்தில ஏராளமான பேரு கோவணத்தோட இருக்கிறப்ப நீங்க எல்லோரும் புல்லா டிரஸ் பண்ணீட்டிருக்கிறதுதான் ஆபாசம் என்ற வரிகளை நாடகத்தின் போக்கில் படிக்கும்போது உங்களுக்கு கைத் தட்ட தோன்றும். அப்படி தோன்றினால் புத்தகத்தை வைத்து விட்டு அதை செய்து விடுங்கள். ஒரு படைப்பாளிக்கு வேறு எப்படி மரியாதை செய்வது?

நாடகத்தின் வெற்றியில் பேசுகிற சொற்களைப்போலவே பேசாத சொற்களுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நாடகத்திலும் கூட எழுதப்பட்ட சொற்களை போலவே எழுதப்படாத சொற்களும் நம்மிடம் பேசுகின்றன. அதை நம்மை பேசச் சொல்லி பேசுகின்றன.

ன்னதான் அவசரமாக புத்தகத்தை தயாரித்தாலும் சபாபதியை சாபதி என்று போடுகிற அளவுக்கு எழுத்துப்பிழைகளை அனுமதித்திருக்கக்கூடாது.

இந்தப் புத்தகத்தில் இரண்டாம் பாகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஏன் தேவைப்படுகிறது என்ற விளக்கத்தோடு. அடுத்தடுத்த பதிப்புகளில் புதிதாக ஏதாவது சில பகுதிகளை சேர்க்க வேண்டி வரலாம். ஒவ்வொரு முறையும் அதை தெரிந்து கொள்ள புத்தகம் வாங்க முடியாது. எனவே அந்தப்பகுதிகளை இணையத்தில் வெளியிடலாம். ஏற்கனவே புத்தகம் வைத்துள்ளவர்களுக்கு அது பயன்படும்

நான் ஒருத்தன் கத்தி என்ன ஆகப்போகிறது?’ என்கிற அவநம்பிக்கைகளுக்கு மத்தியில், “நான் ஒருத்தனும் குரல் கொடுக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்” என்கிற அக்கறைதான் ஞாநியின் குரல், அவரது பேச்சு, எழுத்து, நாடகம் எல்லாமே.

தன்னுடைய கருத்துக்களை கடைபிடிப்பதில்தான் கறார் பேர்வழியே தவிர மனிதர்களை நேசிப்பதில் கனிவான பேர்வழிதான்.

கருத்தைச்சுதந்திரமாக முன்வைப்பதற்கு ஞாநி கொடுக்கிற முன்னுரிமை மிகவும் மதிக்கத்தக்கது. மாற்று கருத்துக்களை முழுமையாக பேசவிட்டு அதைப்பற்றிய தன் கருத்தை தெளிவாக முன் வைக்கிற ஞாநிதான் இந்த கருத்தை கையாள தகுதியானவர்.

பலூன் நாடக ஆசிரியராக நாடகத்தில் வரும் ஜீவா பேசுகிற வரிகள் ஞாநியின் குரலிலேயே என்னுள் ஒளிக்கிறது, “ நெறைய்ய எழுதணும்தான் நான்தான் எழுதணும்னு இல்லே. எல்லோரும் எழுதலாம்.”

முப்பது ஆண்டுகளில் பலூன் புத்தகத்தின் நான்காவது பதிப்பு இது. ஒவ்வொரு பதிப்பிலும் இறுதியில் இந்த வாசகம் தவறாது இடம் பெறுகிறது..  “அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் பலூன் இன்னொரு பதிப்போ இன்னொரு பாகமோ வரத் தேவையற்ற சூழல் உருவாக விரும்புகிறேன்.


இந்த நம்பிக்கையோடு நாமும் சேர்ந்து கொண்டால் நிச்சயம் இதனை சாத்தியமாக்கலாம்.

உங்கள் குழந்தைகள் பேசத்தொடங்கும் முன் இதை படித்துவிடுங்கள்.

உங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் ரகசியம் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது.

குழந்தை வளர்ப்பின் அழகான தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் விழியன் உச்சிமுகர் புத்தகத்தின் மூலம். அப்பாவுக்கும் குட்டி மகளுக்கும் நடக்கும் சுவரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பு..

தேவதை வளரும் வீடுகளில் அதை வளர்த்தெடுக்க கவிதை மனம் கொண்ட நல்ல பெற்றோர்கள் தேவை. அப்படி நம்மை மாற்றிக்கொள்ள சின்ன சின்ன வழிகாட்டுதல்கள்..

பந்தயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் நாம் இழந்தது எதை என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடிகிறது.

படித்து முடித்ததும் உங்கள் குழந்தைகளோடு பேச இல்லை இல்லை உங்கள் குழந்தைகளை பேச வைத்து கேட்க மனம் பரபரக்கும் என்பதுதான் இந்தப்புத்தகத்தின் சாதனை.

நம்மிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது சற்றே பெரிய காதுகளை என்கிறார். உண்மைதான் கூடவே கொஞ்சம் பொறுமை கொண்ட இதயமும்.. .. . .

குழந்தைகள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு மூன்று முறை பூஸ்ட் குடித்து உற்சாகமாக இருக்க வேண்டும் இல்லை இதயம் அந்த அளவிற்கு கனிந்திருக்க வேண்டும். விழியனுக்கு கனிந்திருக்கிறது.

விளையாட்டுத்தோழர்கள்  பொம்மைகள் பென்சில்கள் பேனாக்கள் என குழந்தைகளின் நட்பு உலகம் பெரியது. அதில் நுழைய வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்கள் செருப்பையும் அறிவையும் கழட்டி வைத்துவிட்டு நுழைய வேண்டும்.

உச்சிமுகர் படித்ததும் எனக்கு வந்த குழப்பம் யாரை உச்சி முகர்வது குழலியையா? இல்லை விழியனையா?

குழலிக்கும், விழியனின் பேனாவிற்கும் யாராவது திருஷ்டி சுத்திப்போட்டால் தேவலை.

இதை படித்து முடிக்கும்போது தோன்று உங்கள் வீட்டில் நடந்த குழந்தை கதைகளை தயவுசெய்து நண்பர் விழியனிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா குயில்களின் குரலும் பதிவாகட்டும்.

விழியன் தயவு செய்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். இனியன் என்று.

புத்தகத்திலிந்து ஒரு ஸாம்பிள் :
// A-Z இரண்டு முறை எழுத வேண்டும் எனக் குழலிக்கு வீட்டு வேலை (Home Work). இரண்டாவது முறை O வரும்போது தான் எனக்கு அதனை கூறினாள்.
அப்ப இந்த Oவும், Qவும் friends பாஎன அதற்கு இருக்கு ஒற்றுமையை கூறினாள். பின்னர் P,B,R மூன்று அக்கா தங்கைகள் என்றாள். களத்தில் நான் குதித்து M – W என்ன என கேட்டேன். ‘எனிமீஸ்என்றாள். N – Z என்ன பக்கத்துவீட்டுக்காரர்களா என்றேன். T, J, I இவங்க அண்ணன் தம்பிங்க என்றாள். எவ்வளவு சுவாரஸ்யமா சம்பந்தப்படுத்திக்கிறாங்க குழந்தைகள்.
யாரு குழலி உனக்கு இதைச் சொல்லி தந்ததுஎன கேட்டேன்.
அதான்பா புது ப்ரண்டு, குளிச்சிட்டே இருப்பாளே டூடூ’ (டூடூ அந்த சமயத்தில் இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரம்).

பள்ளிக்குச் செல்லும் போது எல்லாம் மறந்திடுங்க எல்லாமே பிரண்ட்ஸ் எனக் கூறினாள். டூடூ ஏன் இப்படி மாத்தி மாத்தி சொல்லித்தரான்னு தெரியல. //

சரோஜா தேவிகளின் தேவன்கள்

யுவகிருஷ்ணா ரொம்ப நல்லவர். எந்த அளவுக்கு என்றால் கடன் கொடுப்பதற்கு முன்பு ஒருவரைப்பற்றி விசாரித்தால் அவரிடமே போனைக் கொடுத்து உங்களைப்பற்றி விசாரித்தார்கள் என்று சொல்லும் அளவுக்கு.

எனக்கு ஐம்பதாயிரம் இழப்பு. ஆனால் அந்த வயிற்றெரிச்சலுக்கும் இந்த விமர்சனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

யுகிருஷ்ணா என்ற பெயர், ‘நல்ல எழுத்தாளர்’ என்று பிராண்டிங் ஆகியிருப்பதால் இந்தக்கட்டுரை முழுக்க நான் யு.கி. என்ற பெயரையே பயன்படுத்தப்போகிறேன். வேண்டுமானால் யு.கி யும் இந்த யோசனையை தொடரலாம்.

சரி. இனி யு.கியின் சரோஜாதேவி கட்டுரைகளுக்கு வருவோம். பதின் பருவத்தில் நடக்கும் பாலியல் தேடல்கள் பற்றிய கேலியான கட்டுரைகள். அதனால் அதே பாணியில் என் விமர்சனமும்.

சவிதா பாபி கட்டுரையில் இணையத்தில் எல்லையில்லா ஆபாசத்தை கட்டுப்படுத்தும் விசயத்தில் வளைகுடா நாடுகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதிலிருந்தே யு.கியின் சமூக அக்கறை புரிகிறது.
விர்ச்சுவல் விபச்சாரம் கட்டுரையில், யு.கி. தன் எழுத்துக்களை படிக்கிற எவரும் ஏமாந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் எடுத்த முயற்சிகளை படிக்கிற போது கண்களில் நீர்  கசிகிறது.

தன் வாசகன் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய எழுத்தாளர் என்பதை உணரும் போது இந்தப்புத்தகத்தை படிக்கிற வாசகன் நிச்சயம் இவருக்கு மனதுக்குள் நன்றி சொல்வான்.

எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு கடைசியில் யார்தான் இதையெல்லாம் சரிசெய்யப்போகிறார்களோ என்கிற தன் சமூக அக்கறையையும் கட்டுரையின் முடிவில் அவர் சேர்க்கத்தவறவில்லை.

இக்கட்டுரையில் நான் என்று வரவேண்டிய இடத்தில் எல்லாம் சாமியார்கள் பயன்படுத்தும் நாம் என்ற சொல்லை யு.கி பயன்படுத்துவதில் உள்ள குறியீடு என்ன? என்பதுதான் எனக்கு கடைசிவரை விளங்கவில்லை.

சரோஜாதேவி கட்டுரை படிக்கிறபோது மண்சார்ந்த தனித்தன்மை இல்லையே என்ற ஆதங்கத்தில் இவரே மீட்டுக்கொண்டு வந்துவிடுவாரோ என்ற பயம் நம்மை சூழ்கிறது.

போட்டுத்தாக்கு கட்டுரையில் நல்ல வார்த்தைகள் எல்லாம் எப்படி கெட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆதங்கப்படும் கட்டுரையில் அங்கதம்தான் என்றாலும் கூட தேவையில்லாமல் விளக்கு விருதை கிண்டலடித்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது..
சன்னிலியோன் பற்றிய கட்டுரையில் சிம்புவுக்கு கூட தெரியாத விஷயங்களை பகிர்கிறார். கட்டுரை என்று வந்துவிட்டால் இவர் செய்கிற கள ஆய்வுக்கு அளவேயில்லை.

பிட்டு பார்ப்பது ஒரு குற்றமா? கட்டுரையில் பிட்டு பார்ப்பது ஒன்றும் குற்றமில்லை. பிட்டு படம் எடுப்பதுதான் தவறு என்று வாதிடுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  பார்ப்பதனாலேதானே எடுக்கிறார்கள். யு.கி தன் அடுத்த கட்டுரையில் விளக்கட்டும்.

யு.கி. தன் கட்டுரைகளில் எல்லா பிராபளத்தையும் சர்வ சாதரணமாக டீல் செய்கிறார்.

இந்தியாவின் முதல் 3டி படத்திற்காக இவர் கொடுக்கும் குரலை பார்த்தால் இவரே ஒரு அண்ணாவாக மாறி நீண்ட நெடிய போராட்டத்தை தொடங்கிவிடுவாரோ என்ற பயம்தான் வருகிறது.

புத்தகத்தில் மிகவும் நெருடலாக இருந்தது அமலா பால் பற்றிய கட்டுரைதான். என்னதான் திரைப்பட நடிகை என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் அழகைப்பற்றி எல்லை மீறி கிண்டலடிப்பது யு.கியின் மீதான மரியாதையை குறைத்துவிடுகிறது.. கண்டிப்பாக இந்த கட்டுரையை அடுத்து பதிப்பில் தவிர்க்க வேண்டுகிறேன்.

எள்ளல் நிறைய இடங்களில் எல்லை மீறிவிடுகிறது. எல்லை மீறிய எண்ணங்களைப்பற்றிய கட்டுரைகளை எழுத இந்த  மொழிதான் சரி என்று நினைத்திருக்கிறார் யு.கி.

யு.கியிடம் ஜொள்ளுவதற்கு இன்னும் ஏராளம் விஷயங்கள் கைவசம் இருக்கும்போல தெரிகிறது. நிறைய கள ஆய்வுகளும் செய்து வருவார் போல தெரிகிறது.

எல்லா நாடுகளைப்பற்றியும் எழுதியிருப்பதால் இவருக்கு இருக்கும் உலகளாவிய அறிவு நம்மை மிரட்டுகிறது.

எழுத்தாளரும் பதிப்பாளரும் சேர்ந்து கொளுத்தும் விதமாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு யாராவது அதை கொளுத்திய பிறகு புகழ்  பெற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்களோ என்று சந்தேகம் கூட வருகிறது சில கட்டுரைகளை படிக்கிறபோது.

மிக நெருங்கிய நண்பனிடம் கூட பேசத்தயங்குகிற சில விஷயங்கள் இதில் பேசப்படுவதால் யு.கியை ஒரு நண்பனாக உணர்வார்கள் என்பது இந்நூலின் மூலம் யு.கி. பெருகிற பயனாக இருக்கும்.

சித்த வைத்தியர் சிவராஜிடம் திட்டு வாங்கக்கூடிய அளவுக்கு கெட்டுப்போனவர்களுக்கு இந்தப்புத்தகம் பயன்படாது. ஆனால் ஆரம்பநிலையில் உள்ள ஆசாமிகள் இதைப்படித்தால் தவறாக யாரிடமும் சிக்காமல் தப்பிப்பார்கள் என்பதால் இதை விழிப்புணர்வு நூல் வகையிலேயே சேர்க்கலாம்.

இதைப்படித்துவிட்டு டைம்பாஸிற்கோ அல்லது சந்தானத்திற்கு டிராக் எழுதவோ இவரைக் கொண்டு போய்விடுவார்களோ என்று தோன்றுகிறது.

யு.கி இதே அங்கதச்சுவையில் நிறைய எழுதவேண்டும். ஆனால் சரோஜாதேவி போதும்.


யுவகிருஷ்ணா எழுத வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

Friday, 16 January 2015

பாலின் நிறம் கருப்பு

பாலின் நிறம் கருப்புஇந்தப்புத்தகத்தை படித்ததும் இப்படித்தான் சொல்வீர்கள் 
ஆரோக்கியத்தின் பெயரில், பெரிய அளவில் நடக்கிற வணிக கொள்ளையைப் பற்றிய மிகச் சிறிய புத்தகம், 'பால் ஒரு உயிர்கொல்லி.'

பாலை செரிமானம் செய்வதற்கான சக்தியை உடல் நான்கு வயதிற்கு பின் இழந்துவிடுகிறது.

வெள்ளை அணுக்கள், உரங்கள், கிருமிகள், நச்சுக்களின் கலப்படமே பால்.
பசுவின் பால் ஏற்படுத்தும் அமிலத்தன்மை கோலா பானங்கள் ஏற்படுத்துவதை விட அதிகம் என புத்தகம் முழுவதும் அதிர்ச்சி தகவல்கள் நிரம்பியிருக்கிறது

பால் ஏற்படுத்தும் நோய்கள் பற்றிய உலக அளவிலான ஆராய்ச்சிகளை பட்டியலிடுகிறது. நோய்களின் பட்டியலை படித்தாலே சூடு பட்ட பூனையாவீர்கள்.

வளர்ந்து வருகிற கன்றுக்குட்டியிடம் பால் தருகிறேன் என்றால், ‘’மிக்க நன்றி. எனக்கு சாப்பிட புற்கள் இருக்கின்றன’’ என்றே கூறும் என்று எழுதப்பட்டுள்ள இடம் சுவையாக இருக்கிறது. மொத்த புத்தகத்தையும் இப்படி எழுத முடிந்தால் இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும்.
அடுத்த பதிப்பில் முயற்சிக்கவும்.

பால் பண்ணை மாடுகளுக்கு நேரும் அவலத்தை சொல்லும்போது புரிகிறது வணிகத்தில் கருணை கிடையாது. வாடிக்கையாளர்களிடம் கூட.
பத்து நிமிடத்தில் படித்துவிடலாம். ஆனால் பால் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டுவிட?

சரியாக உள் வாங்கியிருந்தீர்கள் என்றால் ஒரு நொடியில் விட்டுவிடலாம்.

சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்கிறவர்கள் மறக்காமல் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். கொஞ்சம் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும். 

நாமும் இளம் பருவத்து பெண்களும்..

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்


என் மதிப்பிற்குரிய அண்ணி அ.வெண்ணிலாவின் சிறுகதை தொகுப்பு. (அண்ணன் மு.முருகேஷ்) விகடன் வெளியீடு.

அண்ணியின் கவிதைகளைத்தான் அதிகம் படித்திருக்கிறேன். கவிதைகள் பேசிய அதே பேசு பொருட்கள் இன்னும் ஆழமாக.

நல்லவன்னு சொல்லிக்கிற கெட்டவன்களையும் கெட்டவன்னு சொல்லிக்கிற நல்லவன்களையும் பற்றிய பகிர்தல்கள்..

இந்தக்கதைகள் முழுக்க நான் ஆண்களைத்தான் படித்தேன். பெண்களும் வருகிறார்கள். அந்த பெண்களுக்காக வருத்தப்பட்டேன்.. அந்த ஆண்களுக்காக வெட்கப்பட்டேன்.

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் புத்தகத்தின் தலைப்புக்கதை, சிறந்த சிறுகதை மற்றும் சிறந்த மனோதத்துவ கட்டுரை இரண்டுக்கும் இடையில் இருக்கிறது.

முதல் இரண்டு கதைகளில் அந்த சிறுமிகளுக்கு துன்பம் இழைத்தவர்கள் யார் என்பது நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. அந்த சிறுமிகளுக்கும் தெரியவில்லை. நாம்தான் அவர்களை கண்டறியவேண்டும். அவர்களை களை எடுக்க வேண்டும்.

ஒரு படி நெல்லுச்சோறும் சில தண்ணீர்ப் பாக்கெட்டுகளும்...  பொங்கி வரும் ஆறாக ஒடிக்கடக்கும் சிறுகதை. நிலமாக நீராக நம்மை தாங்கும் பெண்கள் பற்றி பேசுகிறது. நாடகத்தன்மை கொண்ட முடிவாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத ஒரு தாகம் போல உணர்ச்சி பிசைவில் மனதை கொண்டு நிறுத்திவிடுகிறது.

அடையாளம் எனக்கு தாடிதான் அடையாளம். என் மனைவிக்கு கண்ணாடி. அதை மாற்றி கொண்டார் லேசர் ட்ரிட்மென்ட் மூலம். இப்பொழுது என் மனைவியின் அடையாளம் என்ன? படிக்கிற போது அவருக்கு, ‘நல்லா படிப்பா’ என்பது அடையாளம். எனக்கும் அதுதான் அடையாளம். ஆனால் புத்தகங்கள் வேறு.

அடையாளங்கள்தான் நம்மை புண்படுத்துகிறது. நம் அடையாளங்களால்
அதிகம் புண்படுத்தப்படுகிறோம். ஆனால் இந்தக்கதை அடையாளத்தை புண்படுத்திய பெண் பற்றிய கதை.

மாணவிகளின் வகுப்பறையில் நம்மையும் அமர்த்தி கொஞ்சம் நேரம் வாழவைத்து அவர்களின் வலியையும் உணர்த்துக்கிறது.

ஒரு எழுதுகோலும் சில திருவிளையாடல்களும் சிறுகதை எள்ளல் மிகுந்த மொழி நடையில் எழுதுகோலில் எழுதப்படுகிற எழுத்துக்கும் முகநூலுக்காக எழுதப்படுகிற எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது

வெளிய  பெண்களின் கஷ்டத்தை ஆண்கள் புரிந்து கொண்டுவிட்டால் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்று இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தொல்லை படுகிற இடங்களில் கூட போய் நின்று கொண்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை படித்த போது ச்சீ என்றிருந்தது.  ஒரு பெண் வெளிய செல்கிற இடத்தைக்கூட விட்டுவைக்க மாட்டார்களா?

சீனாவில் பிரசவ வலியை ஆண்கள் உணர்வதற்கு இயந்திரம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் உங்களை பிணைத்துக்கொள்ளும்போது பிரசவ வலியை உணர முடியும்.  வெண்ணிலா எந்தச்சிரமமும் இல்லாமல் தன் எழுத்துக்கள் மூலமாகவே பெண்களின் எல்லா வலியையும் நமக்கு கடத்தி விடுகிறார்.

எல்லாப்பெண்களுக்கு எதிரிலும் ஒரு சில நாய்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறது. சில சமயம் குரைக்கிறது. சில சமயம் கடிக்கிறது இதைத்தான் இந்தப்புத்தகம் பேசுகிறது என்பதை அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

இதை அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும். ஆண்கள் இரண்டு முறை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். 

இதைப்படிக்கிற பெண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர், மனம் திறந்து பேச
முடியாதவைகளைப் பற்றியெல்லாம் பேசியதற்கான நன்றியாக இருக்கும். ஆண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர் அவர்கள் வீட்டு பெண்களிடம் காட்டப் போகும்  அன்பாக இருக்கும்.


Wednesday, 14 January 2015

ஆசிரியர்களுக்கு ஆசிரியர்..
இது நூல் விமர்சனம் அல்ல..

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே  புத்தகம் படித்த போது எனக்குள் அலையடித்த எண்ணங்களின் தொகுப்பு.

கவிஞர் முத்துநிலவன் எனக்கு தமிழாசிரியர்.

எட்டாவது படிக்கும்போது நான் நடத்திய ‘மலர்’ மாத இதழின் வெளியீட்டு விழாவில் நான் வரவேற்புரை பேச முடியாமல் அழுதபோது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உண்டு என்று என் மனச்சோர்வை நீக்கியவர்.

நாளைய
தமிழ் உலகம்
மாலை சூடப்போகும்
‘மலர்’ வரதுவுக்கு   என்று பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் எழுதி எனக்கு பரிசாக தந்தவர்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்த என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை கொடுத்து படிக்கச்சொன்னவர்.

எனக்கு இதழியல் பாடம் நடத்தியவர். லேஅவுட் சொல்லிக்கொடுத்தவர்.. மற்றவர்களிடம் எப்படிப்பழக வேண்டும் என்பது உட்பட. (யாரையாவது அறிமுகப்படுத்தினால் சும்மா பார்த்துக்கொண்டே நிற்பேன். அவர்கள் சென்றபிறகு வணக்கம் சொல்ல வேண்டும் என்று அன்பாக சொல்லித் தந்தவர்)

பிலிம் சொஸைட்டிக்கு அழைத்துச்சென்று திரைப்பட ரசனையை வளர்த்தவர். டிவி விளம்பரங்களை விழப்புணர்வோடு பார்க்க கற்றுத் தந்தவர்.

இப்படி அவர் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார் . எனக்கு அன்றிருந்த அறிவுக்குறைவினால் நான் கொஞ்சம்தான் கற்றுக்கொண்டேன்.

இன்று சென்னையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கம் அமைத்தது, அதில் குழந்தைகளின் திரைப்பட ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடுவது.. இப்படி என் எல்லா முயற்சிகளுக்கும் விதையிட்டவர்.

இன்று என் மகனை இந்த சமூகத்திற்கு பயன்படுகிறவனாக வளர்க்க வேண்டும் என்ற அக்கறையை நான் இவரிடம் இருந்துதான் பெற்றேன். இப்படிப்பட்ட எண்ணங்களை அவர் வகுப்பில் விதைத்தார். அப்படி சில எண்ணங்கள்தான் இப்போது புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது.

இவரைப்பற்றி தெரியாதவர்கள் கூட இந்தப்புத்தகத்தை படிக்கும்போது இவர் ஆசிரியர் என்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு கல்வி முறையில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...

நீ செய்வது தவறு அல்லது நீ சொன்னது தவறு என்பதை ஒருவரிடம்  நேரில் சொல்ல உங்களுக்கு மிகுந்த தைரியம் இருக்க வேண்டும். அரசுப்பணியில் இருந்து கொண்டு அரசின் தவறுகளை சொல்லும் தைரியத்தை அவருக்கு தமிழ்தான் கொடுத்திருக்க வேண்டும்.

எழுத்தில்தான் என்றில்லை நேரிலும் கூட தவறை சொல்லிவிடுவார்.  சங்கடப்படுவார்கள் என்பதைப்பற்றிய லேசான சங்கடத்தோடே கூட தவறை முகத்திற்கு நேரே எந்த இடத்திலும் சுட்டிக்காட்டிவிடுவார்.  இந்த இடத்திலும் அப்படித்தான்.

பல தனியார் பள்ளிகள் கல்விச்சாதனை செய்யாமல் கட்டணச்சாதனை செய்ததை அடித்துச்சொல்கிற கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது, ‘பாடத்திட்டத்தில் ஊடகம்.’ சினிமாவை,பத்திரிக்கைகளை,டிவியை கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி பேசும் இக்கட்டுரை என்னைக் கவர காரணம், இவை எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி வாழ்க்கையை அவர் கற்றுத்தந்ததே.

மாணவர்கள் வீடுகளுக்கு, அவர்கள் படிக்கிறார்களா என்பதை இரவிலும் அதிகாலையிலும் சென்று பார்த்ததை பற்றிய கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன்.

நான் படிக்கும்போது இப்படி செய்யவில்லை. அப்படி வந்திருந்தால் நான் விழித்துக் கொண்டிருந்திருப்பேனா? அல்லது உறங்கிக் கொண்டிருந்திருப்பேனா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவர் ஆசிரியப்பணியில் அரசு போட்டுத்தந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு சதுரம் போட்டவர் என்பதற்கு நானே சாட்சி.

மாணவர்கள் மேல் கல்வியின் மேல் ஆர்வமுள்ள இளம் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடப்புத்தகம். ஏனெனில் இவர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்.


என் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழ்நடைப்பிழைகள் கட்டுரையை இன்னும் விரிவு செய்து தனியாக ஒரு புத்தகமாக கொண்டு வாருங்கள். அனைவருக்கும் பயன்படும்.

அதே போல் மாணவர்களுடனான உங்கள் அனுபவங்களையும் தயவு செய்து தனி நூலாக கொண்டு வர வேண்டும். அது அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும்.

( அகரம் பதிப்பகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழாசிரியர் புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் வர விடலாமா?. ஐயாவின் உதவியையே நாடியிருக்கலாமே? )

முழு இரவையும் புத்தகத்தோடும் இனிய நினைவுகளோடும் செலவிட்ட மகிழ்ச்சியில்...


கிருஷ்ண. வரதராஜன்.