Friday 15 May 2015

36 வயதினிலே ...படம் ஆண்களுக்கான பா)டம்


திருமணமான புதிதில் நாங்கள் முதன் முதலில் பார்த்த படம் 'திருட்டுப்பயலே.' (எதுவும் குறீயிடாக இருக்குமோ?)

அப்பொழுது தொடங்கி இப்பொழுது வரை பெரும்பாலும் நான் அழைத்து சென்ற படங்கள் தலையில் அடித்துக்கொள்ளும் ரகம்தான். 

பாராட்டும் படி ஒரு படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இந்த முறை முதல் நாள் முதல் ஷோ 36 வயதினிலே அழைத்துச் சென்றேன்.

36 வயதில் வருகிற பிரச்சனையை பற்றி வரும் படமாக இருக்கும் என்று நினைத்தால் பெண்களுக்கு எப்போதும் பிரச்சனையாக இருக்கிற கணவர்கள் பற்றிய படம்.

ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்?இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.

பெண்களின் கனவு காலவதியாகும் நாள் திருமண நாள்தானோ ?

திருமணத்திற்கு முன் என் மனைவியிடம் பேச ஆரம்பித்த நாளிலிருந்தே என் கனவுகள் இலட்சியங்கள் என்று எவ்வளவோ பேசியிருக்கிறேன். ஆனால், 'உன் கனவுகள் என்ன?' என்று கேட்டதேயில்லை.

திருமணமான நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் நாங்கள் நடத்தும் ஒரு கோடை முகாமில் கேம்ப் பையரில் அவர் நடனம் ஆடும் வரை அவளவு நளினமாக நடனம் ஆடுவார் என்பதே எனக்கு தெரியாது. 

அதற்காக இப்போது வரை நான் வருத்தப்படுகிறேன்.

திருமணமான புதிதில் எங்கள் குடும்பத்தை பற்றி திட்டமிடும்போது "ஒரு ஆண் குழந்தை. ஒரு பெண் குழந்தை" என்று என் விருப்பத்தை சொன்ன போது "இன்னொரு குழுந்தையை நாம் தத்தெடுத்துக்கொள்ளலாம்" என்றார் என் மனைவி. 

இப்பொழுது யோசித்தால் கூட அந்த விசாலமான மனது எனக்கு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. 

"என் குழந்தையைத்தானே என் குழந்தையாக நினைக்க முடியும். இன்னொரு குழந்தையை எப்படி என் குழந்தையாக நினைக்க முடியும்?" என்று நான் கேட்ட நொடியிலிருந்து அவரது கனவுகள் காலாவதியாகத் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு தாடியில் நரை விழுந்த போது சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிற நான் மனைவிக்கு வந்தபோது கிழவி என்று கிண்டல் செய்கிறேன்.

ஜாலியாக கேலி செய்கிறோம் என்று நினைத்து நாம் எப்படியெல்லாம் விளையாட்டாக புண்படுத்தி விடுகிறோம்.

திருமணமான சில வருடங்களில் தீடிர் தீடிர் என்று, நம் திருமண நாள் சொல்லுங்க?  என் பிறந்தநாள் என்னைக்கு சொல்லுங்க? என கேட்கும்பொழுதெல்லாம் எல்லா தேர்வுகளிலும் விழிப்பது போலவே வழித்திருக்கிறேன்.

காதலியின் விருப்பங்களை கண்டறிந்து நிறைவேற்றுவதே வாழ்வின் நோக்கம் என

எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக. எனக்காகவேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் மனைவியும் மகிழ்ச்சியாக என்பதிலேயே நான் திருப்தியடைந்துவிட்டேன்.

அவருடைய வாழ்க்கையை அவருடைய கனவுகளுக்காக அவர் எப்பொழுது வாழப்போகிறார்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

வாருங்கள் சேர்ந்து பதில் தேடுவோம். அதற்கு முன் மனைவியோடு ஒரு ஸெல்பி எடுத்துக் கொள்வோம்.



( பின் குறிப்பாக ஒரு நன்றி : படம் முழுவதும் வசனங்களால் நம் கன்னத்தில் அறைகிற விஜிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.. )

( பின் குறிப்பாக ஒரு தகவல் : சினிமா விமர்சனம் என் முந்தைய பதிவில் )

36 வயதினிலே ... பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய பாடம்


உங்கள் கணவருக்கும் சேர்த்து நீங்களே டிக்கெட் புக் செய்து அழைத்துச் செல்லுங்கள்.  

இல்லாவிட்டாலும் இந்த படம் பார்த்த பிறகு அடுத்த படத்துக்கு நீங்கள் அப்படித்தான் செய்வீர்கள்.


கட் அவுட் கிடையாது. பாலாபிஷேகம் கிடையாது. விசில் சத்தம் இல்லை. பிளாக்கில் யாரும் டிக்கெட் விற்கவில்லை. பேப்பரை கிழித்து யாரும் ஸ்கிரீன் மீது வீசவில்லை. ஆர்ப்பட்டமில்லாமல் அமைதியாக ரீலிஸான அன்று முதல் ஷோ படம் பார்க்க முடிகிறது என்பதற்காகவே ஹிரோயினிசம் கொண்டாடப்பட வேண்டும். 

அரங்கை நிறைத்த பெண்களை பார்த்தாவது  நல்ல சினிமாவுக்கான ஏக்கத்தை மசாலா சினிமா இயக்குநர்கள் புரிந்து கொண்டால் சரி என்று தோன்றுகிறது..



படத்துக்கு வருவோம்.

வாழ்க்கையில் ஆயாசம் அடைகிற ஒரு பெண்ணின் 36 வயதில் தொடங்கி சாதிப்பதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையை எய்துவதை சொல்வதே படத்தின் கதை.

சமையல், குழந்தைகள், கணவன், வீட்டின் பற்றாக்குறைக்காக வேலை என வீடே உலகமாக இருக்கும் மனைவியை உலகமே வீடாக இருக்கிற கணவன் நடத்துகிற விதமும் மனைவி தன் உலகத்தை மீட்டெக்கிற விதமும் கவித்துவமாக பதிவாகியிருப்பதால் ஜோதிகாவிற்கு இது ஒரு அர்த்தமுள்ள ரீ என்ட்ரீ.

எந்தவித நாயகி அம்சமும் இல்லாமல் சீரியல் பார்க்க ஒடுவது, சீட்டில் இடம் பிடிக்க பாட்டியை ஏமாற்றி எழுப்பி விடுவது, வம்பு பேசுவது, உடன் வேலை பார்க்கும் பெண்ணின் வயிற்றெரிச்சலை கிளப்பி விடுவது என நம்ம பக்கத்து வீட்டு பெண் (நம்ம வீட்டு பெண் என்று சொன்னால் அடி விழும்)  பாத்திரத்தில் ஜோதிகா அழகாக அசத்தியிருக்கிறார். 

"இன்னொரு வசந்தி இந்த வீட்டில் உருவாகிவிடக்கூடாது" என்று நினைக்கிற கணவர்கள் 'வசந்தியை நாம்தான் இப்படி வைத்திருக்கிறோம்' என்று உணர்வதில்லை.  இதை உணர்த்துகிற ரகுமானின் அண்டர் ப்ளே நடிப்புக்கு தனியாக ஒரு பொக்கே கொடுக்கலாம். 

'நா வேலையா இருக்கேன். பத்து நிமிடம் கழித்து பேசுகிறேன்' என்று சொன்னதற்காக மணி கணக்கில் காத்திருக்கும் மனைவியை,  இரண்டு நாள் கையிலே பிடிக்க முடியவில்லை என்றால் இந்த ஆண்கள் முகம் எப்படி இருக்கும் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடுகளை எல்லாம் உயிருள்ளவர்களுக்கான கல்லறையாக வைத்திருக்கிறோம் என்பதை ஜோதிகா பேசும்விதம் ஒரு ஹைக்கூ கவிதை.

36-vayathinile-movie-release-posters01
படம் முடிந்ததும் வசனம் யார் என்று க்ளிப்போர்டை வந்து பார்க்க வைத்த விஜிக்கு பெண்களின் சார்பாக ஒரு சல்யூட். 

"நம்ம மக்கள் விஷத்தை பார்த்து பயப்பட மாட்டாங்க. விலைய பார்த்துதான் பயப்படுவாங்க.. ஏழைக்கு ஒரு தக்காளி பணக்காரனுக்கு ஒரு தக்காளின்னு இங்க எதுவும் கிடையாது.."  

"பிரசவத்தை விட பெரிய வலி ஒரு கணவன் மனைவியை அவமானப்படுத்தறதுதான்."

"உன்னை தொலைச்சிடாத உன் கனவும் தொலைஞ்சிடும்" என எல்லாமே நச்..

"எல்லாத்தையும் விமர்சனம் பண்றதுதான் அறிவுன்னு ஒரு தவறான தலைமுறை நாங்க உருவாக்கிவிட்டோம்" என்று பேசுகிற பக்கத்து வீட்டு ஆசிரியர் தொடங்கி "இந்த தலைமுறைக்கு ருசியே தெரியாது" என்று பேசுகிற சமையல் கலைஞர் வரை பலரும் அழகான பன்ச் வைப்பது படத்தை தொடர்ந்து சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது. 

பேஸ் புக்கில் எதையும் கலாய்க்கும் மன நிலையை பேஸ் புக்கை வைத்தே ஜாலியாக கலாய்கிறார்கள்.

தேவைப்படும் நேரத்தில் கண்ணில் மட்டும் நடிக்கும் ஜோதிகாவிற்கு வாடி ராசாத்தி என்று ஆரத்தி எடுக்க வேண்டிய படம்தான். 

குடும்பத்தை உருவாக்கிற தியாகத்தில் தங்களை தொலைத்துவிட வேண்டிய தில்லை என்பதே பெண்கள்  உணர வேண்டிய பாடம்

வசந்தியை மீட்டெடுக்கும் நட்பான சூசன்களாக கணவர்களே அமைந்துவிட்டால்.. அது எப்படி இருக்கும் என்பதற்கு கீழே இருக்கும் படமே சாட்சி.. 

இந்தப்படத்தை சூர்யா தயாரித்ததே படத்தில் உள்ள பாடத்தை எப்படி பின்பற்ற வேண்டும் என்று சமூகத்திற்கு சொல்லும் மிக முக்கிய செய்தியாக கருதுகிறேன்.

மறு வருகைக்கு ஜோதிகாவிற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்..

Tuesday 5 May 2015

இயக்குநர் ரஞ்சித்தின் சூப்பர் படக் கதை


கதை விவாதத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.

கண்டிப்பாக அதில் பைக்கிலிருந்து பலூனுக்கு தாவுகிற அளவுக்க வலிந்து திணிக்கப்பட்ட நாயக அம்சங்கள் இருக்காது.

ரஜினியை நம்பாவிட்டாலும் ரஞ்சித்தை நம்பலாம்.


அரசியல் தளத்தில் உள்ள கதை என்று இப்போதே கதைகள் கிளம்பிவிட்டன. அப்பத்தானே எதிர்ப்புக்கு பஞ்சமிருக்காது.

விளம்பரச் செலவு அநேகமாக தயாரிப்பாளருக்கு மிச்சமாகிவிடும்.

அரசியல் கதை. அப்புறம் என்ன? தலைவர் தப்பு செய்கிறவர்களை தட்டிக்கேட்கப் போகிறார்.

நாமும் தவறை சரி செய்யும் வேலையை  தலைவர் பார்த்துக்கொள்வார் என்று ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்டு நாம் செய்து கொண்டிருக்கிற நம் அளவிளான தவறுகளை தொடர ஆரம்பித்து விடுவோம்.  

தான் அடைந்த உயர்வை பயன்படுத்தி இந்த சமூகத்தை உயர்த்தாத கலைஞன் யாராக இருந்தாலும் அவன் நிலைக்கப்போவதில்லை. காலத்தின் ஒட்டத்தில் அவன் காணமல் போய்விடுவான்.

இதை ரஜினியும் ரஞ்சித்தும் உணர்திருந்தால் கதை இப்படித்தான் இருக்கும் :

தவறுகளை தட்டிக்கேட்க மக்களை தயார் படுத்துகிறான் நாயகன். மக்களில் பெரும்பான்மையானவர்கள்  தங்கள் அன்றாட வாழ்வை தாண்டி சிந்திக்க தெரியாதவர்கள் அதனால் நாயகனை மறுக்கிறார்கள். தனக்குள் இருக்கும் நாயகனை மறந்ததால் ஒரு நாயகனுக்காக காத்திருக்கிறார்கள்.

கதையின் நாயகன் ஒவ்வொருவருமே நாயகனாக மாற வேண்டிய அவசியத்ததை புரியவைக்கிறான். ஒரு நாயகனால் ஒன்றையும் மாற்ற முடியாது. ஒவ்வொருவனும் நாயகன் ஆனால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்று உணர்ந்த நாளில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த களத்தில் இறங்குகிறார்கள். நாயகன் மக்களுக்குள் கரைந்து காணமல் போகிறான்.


கதை இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போல இருக்கட்டும்.

இந்த கட்டுரையை அன்புள்ள ரஞ்சித்திற்கு என்று ஆரம்பித்து மீண்டும் படித்துக்கொள்ளுங்கள்.

இதை ரஞ்சித்திற்கான என் மனம்திறந்த மடலாக இங்கே வைக்கிறேன்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, 'நாம் எதுவும் செய்யவேண்டியது இல்லை. நாயகன் நம்மை பார்த்துக்கொள்வார்' என்ற பழைய தனிமனித துதிப்பாடலையே பாடப்போகிறீர்கள் என்றால் தமிழ்சினிமாவும் அதன் ரசிகர்களும் நாசமாகப் போகட்டும் என்று இப்போழுதே வாழ்த்துகிறேன்.

பி.கு :  கதை பற்றி இப்பொழுதே துவங்கும் இணைய விவாதத்தில் நானும் பங்கேற்கிறேன் என தெளிவாக புரிந்து கொள்ளவும்.

Monday 4 May 2015

என்னை தப்பிக்க வைத்த குரங்காட்டி

ஆறாவது படிக்கும்போதுதான் எனக்கு கல்வியால் முதன் முறையாக மூச்சு திணற ஆரம்பித்தது.. 

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு விளையாடுவதற்காகத்தான் சென்றேன். ஏதோ கொஞ்சம் பாடமும் நடத்துவார்கள். நான் படிக்கிறேனா என்று ஆசிரியர்கள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பள்ளிக்கு சென்றாலே படிக்கிறவன்தான் என்கிற அளவுக்கு என் பெற்றோர்களும் இருந்துவிட்டார்கள்.

ஐந்தாம் வகுப்பு லீவுக்கு வீட்டிற்கு வந்த ஆசிரியராக இருக்கும் உறவினர் எல்லாப் படத்திலும் டெஸ்ட் வைக்க எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதே அப்போதுதான் தெரிந்தது...

ஆறாம் வகுப்பிற்காக நான் சேர்ந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியர் எனக்கு ஒவ்வொரு நாளும் அதை உணர்த்தினார்.

ஒவ்வொரு நாளும் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகரித்துக்கொண்டே போனது... சுருங்கிக்கொண்டே இருந்தேன்.

எட்டாவது படிக்கும்போது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து பத்திரிக்கை நடத்துவது என்று முடிவு செய்தோம்.

நான்கு பேரில் அதிகம் படித்தவன் நான்தான்.

ஆமாம் சிறுவர்மலர், காமிக்‌ஸ் துவங்கி துளிர் வரையில் ஒன்றுவிடாமல் நன்றாக படித்தவன்..

அதனால் மாதிரி இதழ் தயாரிக்கிற பொறுப்பு என் வசம் வந்தது. நான் படித்ததை எல்லாம் கலக்கி அடித்து ஒன்றை தயார் செய்தேன். எங்கள் தமிழாசிரியரிடம் கொண்டு போய் காட்டினோம்.  

பாராட்டிவிட்டு, “மாலையில் வீட்டுக்கு வாங்கடா.. நிறைய பத்திரிக்கைகள் தருகிறேன். முதலில் நிறைய படியுங்கள். பிறகு நிறைய படையுங்கள்.. பத்திரிக்கை சிறக்க வாழ்த்துக்கள்” என்றார்.

மாலையில் அவர் கொடுத்த பல சிற்றதழ்களை அன்றைக்கு இரவுக்குள் படித்து முடித்தபோது நான் தயாரித்த மாதிரி இதழ் எனக்கே பிடிக்காமல் போய்விட்டது..

அடிக்கடி ஆசிரியர் வீடு பிரிண்டிங் பிரஸ் என கல்வி தாண்டி வெளியில் செல்வதற்கு யார் வீட்டிலும் அனுமதிக்காததால் நண்பர்கள் கழண்டு கொள்ள நானே நண்பகளுக்கும் சேர்ந்து செயல்பட்டேன்.

தமிழாசிரியர் வழிகாட்டுதலோடு மலர் என்ற மாத இதழ் அச்சு இதழாக உருவானது..

வெளீயிட்டு விழாவில் வரவேற்புரை சொல்ல முடியாமல் அவமானத்தில் அழுதுவிட்டேன்..

விழாவிற்கு தலைமையேற்றிருந்த என் தமிழாசிரியர் எழுந்து சொன்னார்.. "பேசினால்தான் திறமை என்றில்லை. ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. இப்படி ஒரு பத்திரிக்கை துவங்கியிருப்பது கூட ஒரு திறமைதான். பயிற்சியால் எல்லாவற்றையும் வளர்த்துக்கொள்ள முடியும்" என்றார்.

அன்று நம்ப முடியவில்லை.

ஆனால் இன்று ஆயிரக்கணக்காணவர்கள் கூடும் கூட்டங்களில் பேசுகிறேன். பத்து புத்தகம் எழுதிவிட்டேன்.. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி செய்கிறேன். 

பள்ளிக்கூடம் என்னை நசுக்கிவிடாமல் பார்த்துக்கொண்ட என் ஆசிரியரால்தான் இத்தனை அற்புதங்களும் நடந்தது..

பிலிம் சொஸைட்டியில் என்னை உறுப்பினராக்கி உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார். உள்ளூரிலும் வெளியூரிலுமாக எங்கு இலக்கிய கூட்டங்கள் நடந்தாலும் என்னை அழைத்துச் செல்வார். 

எட்டாவது படிக்கும்போதே பத்திரிக்கை நடத்துகிறாரா என்று பலரும் என்னை விழி விரிய பார்க்க நானும் விரிய ஆரம்பித்தேன்.

என்னை சுருங்கிவிடாமல் பார்த்துக்கொண்ட அவரை ஆசிரியர் என்று சுருக்கிவிடமுடியாது. பதின் பருவ குழப்பங்களில் இருந்த எனக்கு அவர் அப்பாவாகவும் இருந்தார். 

இன்று யோசித்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. பல நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறேன்.

அவர் எனக்கு செய்த எல்லாவற்றையும் இன்று நான் சமூகத்திற்கு திரும்பி செய்கிறேன். என் வீட்டை எல்லோரும் வந்து தங்குமிடமாக வைத்திருக்கிறேன்.  குழந்தைகளின் திரைப்பட ரசனையை வளர்க்க மாதமாதம் எங்கள் சாதனாவில் உலக திரைப்படங்கள் திரையிடுகிறோம். எழுத்தாளர்களை கொண்டாடுகிறோம்.

அவர் விதைத்தவைகள்தான் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று தி இந்து பத்திரிக்கையில் பேராசிரியர் ச.மாடசாமி எழுதி தப்பித்த குரங்குகள் எனும் கட்டுரை வந்திருக்கிறது. நானும் ஒரு தப்பித்த குரங்குதான்.

என்னை தப்பிக்க வைத்த குரங்காட்டி புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துநிலவன்.  

திண்டுகல் லியோனி பட்டிமன்றங்களில் எல்லாம் இவரை நீங்கள் பார்க்கலாம்.





எல்லாப் பள்ளிகளிலும் இப்படி நிறைய பேர் குரங்குகளை தப்பிக்க வைத்தால் இந்த நாடு இன்னும் நன்றாக இருக்கும்.


Sunday 3 May 2015

நீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்?


சந்தேகமே இல்லாமல் கமல் ஒரு ம்ருத்யஞ்சன்தான்.

பாடல் கேட்டவுடனேயே  பொழுதுபோக்கு பட வரிசை அல்ல என்று முடிவோடேதான் படத்திற்கு சென்றேன். அதனால் படம் எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

கமல்படம் எப்படியும் இருக்கும் என்ற மனநிலையோடுதான்  ரசிகர்கள் அவரை நெருங்குகிறார்கள். அதனால் அவர்களுக்கும் ஏமாற்றமிருக்காது என்றே தோன்றுகிறது.

இந்தப்படத்தை தவற விடக்கூடாது என்று நான் நினைப்பதற்கு காரணம் நமக்கும் மரணமுண்டு என்பதை மறந்து  மனிதர்களோடு உறாவடுவதை நாம் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறோம். அதைப்பற்றி படம் யோசிக்க வைக்கிறது.

சாதிக்கிற வேகத்தில் சம்பாதிக்கிற வெறியில் உடன் உள்ள உறவுகளின் உணர்வுகள் நமக்கு புரிவதில்லை. அதை கொஞ்சமாவது இந்தப் படம் உங்களுக்கு புரிய வைத்துவிடும்.

கமல் இந்தப்படத்தை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தால் கே.பி இதில் நடித்திருக்க முடியாது. இப்படித்தான் நம் வேலைகளை காரணமாக வைத்து அப்பாவோடு மனம்விட்டு பேச முடியாமல் மனைவியோடு சிரிக்க முடியாமல் குழந்தைகளோடு விளையாட முடியாமல் என பல உறவுகளை நாம் கொன்று கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் கமல் செய்வதைப்போலவே சாகப்போகும் நாம்தானே சாகாதவன் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம்.

நாளை செய்து கொள்ளலாம் என்று நாம் அதிகம் தவறவிடுவது மனித உறவுகளைத்தான்.  நாமும் இறப்போம். நம்மைச் சுற்றி உள்ளவர்களும் இறக்கப் போகிறார்கள். அதற்குள் கொஞ்சம் வாழ்ந்துவிடுவோம் என்பதை படம் அழகாகவே சொல்கிறது.


கமலுடைய வாழ்க்கைதான் கதையோ என்று பிரமை தட்டுகிற அளவுக்கு கமல் வாழ்க்கையோடு பொருந்திப்போகிறது நடிகர் பாத்திரம் முதல் இயக்குநர் பாத்திரம் வரை.  இப்படி ஒரு கதையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் ? 

கதையில் நடிகனுக்கு கடைசி படம். நிஜத்தில் இயக்குநருக்கு கடைசிப் படம்.

தேவையான அளவுக்கு சம்பாதித்து விட்டு அதன் பிறகு வாழவேண்டும் என்று நினைக்கிற பலர் அந்த எல்லைக்கோடு எங்கிருக்கிறது என்று தெரியாததால் கடைசி வரை சம்பாதித்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழமலேயே.. 

பல நேரங்களில் அன்பை சொற்களில்தான் புரிய வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த சொற்களையும் சொல்ல நேரமில்லாதவர்களாக மாறிவிட்டோம்.

நீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்? ஒரே ஒரு காரணம்தான், அது மனித உறவில் உள்ள புதிர்களை பேசுகிறது.. அதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறது..

மரணத்திற்கு பிறகு நாம் மனிதர்களுக்கு விட்டுச்செல்லப்போவது நினைவுகளை மட்டும்தான்.. அவை இனிமையாக இருக்கட்டுமே..