Friday 3 July 2015

அன்பு தரும் பலத்தை உணர்த்தும் பாபநாசம்




வேலை வேலை என்று குடும்பத்தையே கவனிக்க முடியாத ஐ.ஜி குடும்பத்திற்கும் குடும்பத்தை கவனிப்பதையே வேலையாக வைத்திருக்கிற சுயம்புலிங்கம் குடும்பத்திற்கும் இடையே உள்ள பாசப் போராட்டம் நிறைய விஷயங்களை யோசிக்க வைக்கிறது.

ஆண் திமிரை கண்மூடித்தனமான பாசத்தால் தன் மகனிடம் வளர்த்துவிட்டு தவிக்கிற பெற்றோர் வேடத்தில் ஐஜியாக நடித்தவரும் அவரது கணவராக நடித்த இருவருமே நடிப்பு பந்தயத்தில் கமலை தொட்டுவிடுகிறார்கள்.

கடைசியில் கமல் துடித்து அழுகிற காட்சியில் முகத்தின் ஒவ்வொரு பகுதியின் துடிப்பையும்  பார்த்துவிட்டு, கண்ணாடி முன் நின்று முகத்தின் எந்தப்பகுதிகளை எல்லாம் அசைக்க முடிகிறது என்று வீட்டுக்கு வந்ததும் முயற்சித்து பார்த்தேன். ஒரு கலைஞன் தன் உடம்பின் மீது கொண்டுள்ள ஆளுமை பிரமிக்க வைக்கிறது.

நகரத்து வாகனப்புகைகளுக்கு நடுவே வாழ்பவர்களுக்கு பதினைந்து நாளாவது லீவு போட்டு விட்டு வாழ்க்கையை சுவாசித்து விட்டு வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது பாபநாசத்தின் இடப்பதிவு.


குடும்ப உறவுகளில் அன்பு தருகிற பலத்தை இதை விட அழுத்தமாக சொல்ல முடியாது. நகர வாழ்க்கையில் நாம் அதிகம் தொலைப்பது அதைத்தான்.