Sunday 20 September 2015

49 ஓ 50 மார்க்



தின்ன சோத்துக்கு நன்றியாக நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதுஅதை இந்த படத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து தொடங்கலாம்

விடுமுறை நாள் என்பதால் தியேட்டரில் நல்ல கூட்டம்.


சமீபத்தில் ரிலீஸான ஒவ்வொரு படமாக சொல்லி எதுக்கும் டிக்கெட் கிடைக்காமல், கடைசியில் 'இதுதான் இருக்கிறது' என்று சொல்லி 49 ஓ டிக்கெட் வாங்கிச்சென்றவர், நிச்சயம் 'இதை முதலிலேயே கேட்டு வாங்கியிருக்க வேண்டும்' என்று படம் பார்த்தவுடன் முடிவு செய்திருப்பார்.

கவுண்டமணியின் ஒன் மேன் ஷோ மூவி. இது மாதிரி நல்ல படங்களாக மணி காத்திருந்து நடிக்கலாம்.

வாயிக்கும் வயிற்றுக்கும் கட்டுபடியாகவில்லை என்றால் கூட பரவாயில்லை கடனுக்கு கூட கட்டுப்படியாகாத விவசாயத்தை துறந்து விட துணியும் விவசாயிகள், அவர்களுக்கு தூண்டில் போட்டு நிலத்தை விற்கத் தூண்டும் அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இவர்களுக்குள் நடக்கும் சதுரங்க வேட்டைதான் 49 ஓ.

ஏமாற்றி பறித்த நிலத்தை மீட்க கவுண்டமணி நகர்த்தும் ஒவ்வொரு காயும் அழகு. அதில் செக்மேட் 'ஆறடி தாய்மடித் திட்டம்.'

தேர்தல் வரும்போது மட்டும் மேடையில் பேசுவதற்காக மட்டும் மக்கள் பிரச்சனை என்ன?  என்று யோசிக்கும் அரசியல்வாதிகள் கவுண்டர் கையில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.

விவசாயிகளோட மானமே அந்த நிலம்தான். அதை போய் விற்கிறீங்களேடா... என்று கவுண்டமணி பேசுகிறபோது ஒரு கேள்வி வருகிறது. விவசாயிகளின் மானத்தை வாங்கியது யார்?

எவ்வளவு பொறுத்தும் பூமி ஆள முடியாத விவசாயிகளின் சோகம் வலியோடு பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒட்டுப்போட அட்வான்ஸ் கேட்கும்போது சர்வாதிகரத்திற்கு மணி சொல்லும் விளக்கம் அடடே ரகம்.

வரும் எலெக்‌ஷனுக்கு மட்டுமல்மில்லாமல் இனி வரப்போகும் எலெக்‌ஷன் எல்லாவற்றுக்கு சேர்த்து பேரம் பேசும் 1 க்கு 3 ப்ரீ ஆபர் இனி நாடெங்கும் பேசப்படலாம்.

"நோகாம நோட்டு என்ற தொழில் அரசியல் ஒன்னுதான்."

 "மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா இந்த அரசியல்வாதிகள் எல்லாம் தனித்தனியா நிப்பாகங்க.. மக்களுக்கு ஒரு நல்லதுன்னா ( ஆனா அது அரசியல்வரிகளுக்கு பிரச்சனைன்னா ) இந்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்னா நிப்பாங்க" என படம் முழுக்க சூடான கவுண்டர் டயலாக் படத்தை சபாஷ் சினிமாவாக்குகிறது.

 ஆறடி தாய்மடித்திட்டம் சிரிக்கவும் நம்மை சிதைக்கவும் செய்கிறது. விவசாய நிலங்களை சுடுகாடாக்கியது யார்? நாம்தானே.

 49 ஓ பற்றி மணி கேட்கும் கேள்விகள் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டியவைகள்.

இந்தப்படத்தை தேர்தல் நேரத்தில் ரீ ரிலிஸ் இன்னும் கொஞ்சம் அறுவடை செய்யலாம்.