Saturday, 17 January 2015

உங்கள் குழந்தைகள் பேசத்தொடங்கும் முன் இதை படித்துவிடுங்கள்.

உங்கள் வயதை குறைத்துக்கொள்ளும் ரகசியம் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது.

குழந்தை வளர்ப்பின் அழகான தருணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் விழியன் உச்சிமுகர் புத்தகத்தின் மூலம். அப்பாவுக்கும் குட்டி மகளுக்கும் நடக்கும் சுவரஸ்யமான உரையாடல்களின் தொகுப்பு..

தேவதை வளரும் வீடுகளில் அதை வளர்த்தெடுக்க கவிதை மனம் கொண்ட நல்ல பெற்றோர்கள் தேவை. அப்படி நம்மை மாற்றிக்கொள்ள சின்ன சின்ன வழிகாட்டுதல்கள்..

பந்தயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் நாம் இழந்தது எதை என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் உணர முடிகிறது.

படித்து முடித்ததும் உங்கள் குழந்தைகளோடு பேச இல்லை இல்லை உங்கள் குழந்தைகளை பேச வைத்து கேட்க மனம் பரபரக்கும் என்பதுதான் இந்தப்புத்தகத்தின் சாதனை.

நம்மிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது சற்றே பெரிய காதுகளை என்கிறார். உண்மைதான் கூடவே கொஞ்சம் பொறுமை கொண்ட இதயமும்.. .. . .

குழந்தைகள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு மூன்று முறை பூஸ்ட் குடித்து உற்சாகமாக இருக்க வேண்டும் இல்லை இதயம் அந்த அளவிற்கு கனிந்திருக்க வேண்டும். விழியனுக்கு கனிந்திருக்கிறது.

விளையாட்டுத்தோழர்கள்  பொம்மைகள் பென்சில்கள் பேனாக்கள் என குழந்தைகளின் நட்பு உலகம் பெரியது. அதில் நுழைய வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்கள் செருப்பையும் அறிவையும் கழட்டி வைத்துவிட்டு நுழைய வேண்டும்.

உச்சிமுகர் படித்ததும் எனக்கு வந்த குழப்பம் யாரை உச்சி முகர்வது குழலியையா? இல்லை விழியனையா?

குழலிக்கும், விழியனின் பேனாவிற்கும் யாராவது திருஷ்டி சுத்திப்போட்டால் தேவலை.

இதை படித்து முடிக்கும்போது தோன்று உங்கள் வீட்டில் நடந்த குழந்தை கதைகளை தயவுசெய்து நண்பர் விழியனிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா குயில்களின் குரலும் பதிவாகட்டும்.

விழியன் தயவு செய்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். இனியன் என்று.

புத்தகத்திலிந்து ஒரு ஸாம்பிள் :
// A-Z இரண்டு முறை எழுத வேண்டும் எனக் குழலிக்கு வீட்டு வேலை (Home Work). இரண்டாவது முறை O வரும்போது தான் எனக்கு அதனை கூறினாள்.
“அப்ப இந்த Oவும், Qவும் friends பா” என அதற்கு இருக்கு ஒற்றுமையை கூறினாள். பின்னர் P,B,R மூன்று அக்கா தங்கைகள் என்றாள். களத்தில் நான் குதித்து M – W என்ன என கேட்டேன். ‘எனிமீஸ்’ என்றாள். N – Z என்ன பக்கத்துவீட்டுக்காரர்களா என்றேன். T, J, I இவங்க அண்ணன் தம்பிங்க என்றாள். எவ்வளவு சுவாரஸ்யமா சம்பந்தப்படுத்திக்கிறாங்க குழந்தைகள்.
‘யாரு குழலி உனக்கு இதைச் சொல்லி தந்தது’ என கேட்டேன்.
‘
அதான்பா புது ப்ரண்டு, குளிச்சிட்டே இருப்பாளே டூடூ’ (டூடூ அந்த சமயத்தில் இருந்து ஒரு கற்பனை கதாபாத்திரம்).

பள்ளிக்குச் செல்லும் போது எல்லாம் மறந்திடுங்க எல்லாமே பிரண்ட்ஸ் எனக் கூறினாள். டூடூ ஏன் இப்படி மாத்தி மாத்தி சொல்லித்தரான்னு தெரியல. //

சரோஜா தேவிகளின் தேவன்கள்

யுவகிருஷ்ணா ரொம்ப நல்லவர். எந்த அளவுக்கு என்றால் கடன் கொடுப்பதற்கு முன்பு ஒருவரைப்பற்றி விசாரித்தால் அவரிடமே போனைக் கொடுத்து உங்களைப்பற்றி விசாரித்தார்கள் என்று சொல்லும் அளவுக்கு.

எனக்கு ஐம்பதாயிரம் இழப்பு. ஆனால் அந்த வயிற்றெரிச்சலுக்கும் இந்த விமர்சனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

யுவகிருஷ்ணா என்ற பெயர், ‘நல்ல எழுத்தாளர்’ என்று பிராண்டிங் ஆகியிருப்பதால் இந்தக்கட்டுரை முழுக்க நான் யு.கி. என்ற பெயரையே பயன்படுத்தப்போகிறேன். வேண்டுமானால் யு.கி யும் இந்த யோசனையை தொடரலாம்.

சரி. இனி யு.கியின் சரோஜாதேவி கட்டுரைகளுக்கு வருவோம். பதின் பருவத்தில் நடக்கும் பாலியல் தேடல்கள் பற்றிய கேலியான கட்டுரைகள். அதனால் அதே பாணியில் என் விமர்சனமும்.

சவிதா பாபி கட்டுரையில் இணையத்தில் எல்லையில்லா ஆபாசத்தை கட்டுப்படுத்தும் விசயத்தில் வளைகுடா நாடுகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதிலிருந்தே யு.கியின் சமூக அக்கறை புரிகிறது.
விர்ச்சுவல் விபச்சாரம் கட்டுரையில், யு.கி. தன் எழுத்துக்களை படிக்கிற எவரும் ஏமாந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் எடுத்த முயற்சிகளை படிக்கிற போது கண்களில் நீர்  கசிகிறது.

தன் வாசகன் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய எழுத்தாளர் என்பதை உணரும் போது இந்தப்புத்தகத்தை படிக்கிற வாசகன் நிச்சயம் இவருக்கு மனதுக்குள் நன்றி சொல்வான்.

எழுதுவதையெல்லாம் எழுதிவிட்டு கடைசியில் யார்தான் இதையெல்லாம் சரிசெய்யப்போகிறார்களோ என்கிற தன் சமூக அக்கறையையும் கட்டுரையின் முடிவில் அவர் சேர்க்கத்தவறவில்லை.

இக்கட்டுரையில் நான் என்று வரவேண்டிய இடத்தில் எல்லாம் சாமியார்கள் பயன்படுத்தும் நாம் என்ற சொல்லை யு.கி பயன்படுத்துவதில் உள்ள குறியீடு என்ன? என்பதுதான் எனக்கு கடைசிவரை விளங்கவில்லை.

சரோஜாதேவி கட்டுரை படிக்கிறபோது மண்சார்ந்த தனித்தன்மை இல்லையே என்ற ஆதங்கத்தில் இவரே மீட்டுக்கொண்டு வந்துவிடுவாரோ என்ற பயம் நம்மை சூழ்கிறது.

போட்டுத்தாக்கு கட்டுரையில் நல்ல வார்த்தைகள் எல்லாம் எப்படி கெட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று ஆதங்கப்படும் கட்டுரையில் அங்கதம்தான் என்றாலும் கூட தேவையில்லாமல் விளக்கு விருதை கிண்டலடித்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது..
சன்னிலியோன் பற்றிய கட்டுரையில் சிம்புவுக்கு கூட தெரியாத விஷயங்களை பகிர்கிறார். கட்டுரை என்று வந்துவிட்டால் இவர் செய்கிற கள ஆய்வுக்கு அளவேயில்லை.

பிட்டு பார்ப்பது ஒரு குற்றமா? கட்டுரையில் பிட்டு பார்ப்பது ஒன்றும் குற்றமில்லை. பிட்டு படம் எடுப்பதுதான் தவறு என்று வாதிடுகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  பார்ப்பதனாலேதானே எடுக்கிறார்கள். யு.கி தன் அடுத்த கட்டுரையில் விளக்கட்டும்.

யு.கி. தன் கட்டுரைகளில் எல்லா பிராபளத்தையும் சர்வ சாதரணமாக டீல் செய்கிறார்.

இந்தியாவின் முதல் 3டி படத்திற்காக இவர் கொடுக்கும் குரலை பார்த்தால் இவரே ஒரு அண்ணாவாக மாறி நீண்ட நெடிய போராட்டத்தை தொடங்கிவிடுவாரோ என்ற பயம்தான் வருகிறது.

புத்தகத்தில் மிகவும் நெருடலாக இருந்தது அமலா பால் பற்றிய கட்டுரைதான். என்னதான் திரைப்பட நடிகை என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் அழகைப்பற்றி எல்லை மீறி கிண்டலடிப்பது யு.கியின் மீதான மரியாதையை குறைத்துவிடுகிறது.. கண்டிப்பாக இந்த கட்டுரையை அடுத்து பதிப்பில் தவிர்க்க வேண்டுகிறேன்.

எள்ளல் நிறைய இடங்களில் எல்லை மீறிவிடுகிறது. எல்லை மீறிய எண்ணங்களைப்பற்றிய கட்டுரைகளை எழுத இந்த  மொழிதான் சரி என்று நினைத்திருக்கிறார் யு.கி.

யு.கியிடம் ஜொள்ளுவதற்கு இன்னும் ஏராளம் விஷயங்கள் கைவசம் இருக்கும்போல தெரிகிறது. நிறைய கள ஆய்வுகளும் செய்து வருவார் போல தெரிகிறது.

எல்லா நாடுகளைப்பற்றியும் எழுதியிருப்பதால் இவருக்கு இருக்கும் உலகளாவிய அறிவு நம்மை மிரட்டுகிறது.

எழுத்தாளரும் பதிப்பாளரும் சேர்ந்து கொளுத்தும் விதமாக ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டு யாராவது அதை கொளுத்திய பிறகு புகழ்  பெற வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்களோ என்று சந்தேகம் கூட வருகிறது சில கட்டுரைகளை படிக்கிறபோது.

மிக நெருங்கிய நண்பனிடம் கூட பேசத்தயங்குகிற சில விஷயங்கள் இதில் பேசப்படுவதால் யு.கியை ஒரு நண்பனாக உணர்வார்கள் என்பது இந்நூலின் மூலம் யு.கி. பெருகிற பயனாக இருக்கும்.

சித்த வைத்தியர் சிவராஜிடம் திட்டு வாங்கக்கூடிய அளவுக்கு கெட்டுப்போனவர்களுக்கு இந்தப்புத்தகம் பயன்படாது. ஆனால் ஆரம்பநிலையில் உள்ள ஆசாமிகள் இதைப்படித்தால் தவறாக யாரிடமும் சிக்காமல் தப்பிப்பார்கள் என்பதால் இதை விழிப்புணர்வு நூல் வகையிலேயே சேர்க்கலாம்.

இதைப்படித்துவிட்டு டைம்பாஸிற்கோ அல்லது சந்தானத்திற்கு டிராக் எழுதவோ இவரைக் கொண்டு போய்விடுவார்களோ என்று தோன்றுகிறது.

யு.கி இதே அங்கதச்சுவையில் நிறைய எழுதவேண்டும். ஆனால் சரோஜாதேவி போதும்.


யுவகிருஷ்ணா எழுத வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

Friday, 16 January 2015

பாலின் நிறம் கருப்பு

பாலின் நிறம் கருப்பு : இந்தப்புத்தகத்தை படித்ததும் இப்படித்தான் சொல்வீர்கள் 
ஆரோக்கியத்தின் பெயரில், பெரிய அளவில் நடக்கிற வணிக கொள்ளையைப் பற்றிய மிகச் சிறிய புத்தகம், 'பால் ஒரு உயிர்கொல்லி.'

பாலை செரிமானம் செய்வதற்கான சக்தியை உடல் நான்கு வயதிற்கு பின் இழந்துவிடுகிறது.

வெள்ளை அணுக்கள், உரங்கள், கிருமிகள், நச்சுக்களின் கலப்படமே பால்.
பசுவின் பால் ஏற்படுத்தும் அமிலத்தன்மை கோலா பானங்கள் ஏற்படுத்துவதை விட அதிகம் என புத்தகம் முழுவதும் அதிர்ச்சி தகவல்கள் நிரம்பியிருக்கிறது

பால் ஏற்படுத்தும் நோய்கள் பற்றிய உலக அளவிலான ஆராய்ச்சிகளை பட்டியலிடுகிறது. நோய்களின் பட்டியலை படித்தாலே சூடு பட்ட பூனையாவீர்கள்.

வளர்ந்து வருகிற கன்றுக்குட்டியிடம் பால் தருகிறேன் என்றால், ‘’மிக்க நன்றி. எனக்கு சாப்பிட புற்கள் இருக்கின்றன’’ என்றே கூறும் என்று எழுதப்பட்டுள்ள இடம் சுவையாக இருக்கிறது. மொத்த புத்தகத்தையும் இப்படி எழுத முடிந்தால் இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும்.
அடுத்த பதிப்பில் முயற்சிக்கவும்.

பால் பண்ணை மாடுகளுக்கு நேரும் அவலத்தை சொல்லும்போது புரிகிறது வணிகத்தில் கருணை கிடையாது. வாடிக்கையாளர்களிடம் கூட.
பத்து நிமிடத்தில் படித்துவிடலாம். ஆனால் பால் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டுவிட?

சரியாக உள் வாங்கியிருந்தீர்கள் என்றால் ஒரு நொடியில் விட்டுவிடலாம்.

சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்கிறவர்கள் மறக்காமல் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். கொஞ்சம் ஆரோக்கியமும் ஆயுளும் கூடும். 

நாமும் இளம் பருவத்து பெண்களும்..

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்


என் மதிப்பிற்குரிய அண்ணி அ.வெண்ணிலாவின் சிறுகதை தொகுப்பு. (அண்ணன் மு.முருகேஷ்) விகடன் வெளியீடு.

அண்ணியின் கவிதைகளைத்தான் அதிகம் படித்திருக்கிறேன். கவிதைகள் பேசிய அதே பேசு பொருட்கள் இன்னும் ஆழமாக.

நல்லவன்னு சொல்லிக்கிற கெட்டவன்களையும் கெட்டவன்னு சொல்லிக்கிற நல்லவன்களையும் பற்றிய பகிர்தல்கள்..

இந்தக்கதைகள் முழுக்க நான் ஆண்களைத்தான் படித்தேன். பெண்களும் வருகிறார்கள். அந்த பெண்களுக்காக வருத்தப்பட்டேன்.. அந்த ஆண்களுக்காக வெட்கப்பட்டேன்.

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் புத்தகத்தின் தலைப்புக்கதை, சிறந்த சிறுகதை மற்றும் சிறந்த மனோதத்துவ கட்டுரை இரண்டுக்கும் இடையில் இருக்கிறது.

முதல் இரண்டு கதைகளில் அந்த சிறுமிகளுக்கு துன்பம் இழைத்தவர்கள் யார் என்பது நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. அந்த சிறுமிகளுக்கும் தெரியவில்லை. நாம்தான் அவர்களை கண்டறியவேண்டும். அவர்களை களை எடுக்க வேண்டும்.

ஒரு படி நெல்லுச்சோறும் சில தண்ணீர்ப் பாக்கெட்டுகளும்...  பொங்கி வரும் ஆறாக ஒடிக்கடக்கும் சிறுகதை. நிலமாக நீராக நம்மை தாங்கும் பெண்கள் பற்றி பேசுகிறது. நாடகத்தன்மை கொண்ட முடிவாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத ஒரு தாகம் போல உணர்ச்சி பிசைவில் மனதை கொண்டு நிறுத்திவிடுகிறது.

அடையாளம் எனக்கு தாடிதான் அடையாளம். என் மனைவிக்கு கண்ணாடி. அதை மாற்றி கொண்டார் லேசர் ட்ரிட்மென்ட் மூலம். இப்பொழுது என் மனைவியின் அடையாளம் என்ன? படிக்கிற போது அவருக்கு, ‘நல்லா படிப்பா’ என்பது அடையாளம். எனக்கும் அதுதான் அடையாளம். ஆனால் புத்தகங்கள் வேறு.

அடையாளங்கள்தான் நம்மை புண்படுத்துகிறது. நம் அடையாளங்களால்
அதிகம் புண்படுத்தப்படுகிறோம். ஆனால் இந்தக்கதை அடையாளத்தை புண்படுத்திய பெண் பற்றிய கதை.

மாணவிகளின் வகுப்பறையில் நம்மையும் அமர்த்தி கொஞ்சம் நேரம் வாழவைத்து அவர்களின் வலியையும் உணர்த்துக்கிறது.

ஒரு எழுதுகோலும் சில திருவிளையாடல்களும் சிறுகதை எள்ளல் மிகுந்த மொழி நடையில் எழுதுகோலில் எழுதப்படுகிற எழுத்துக்கும் முகநூலுக்காக எழுதப்படுகிற எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது

வெளிய  பெண்களின் கஷ்டத்தை ஆண்கள் புரிந்து கொண்டுவிட்டால் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்று இதுநாள் வரை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தொல்லை படுகிற இடங்களில் கூட போய் நின்று கொண்டு தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை படித்த போது ச்சீ என்றிருந்தது.  ஒரு பெண் வெளிய செல்கிற இடத்தைக்கூட விட்டுவைக்க மாட்டார்களா?

சீனாவில் பிரசவ வலியை ஆண்கள் உணர்வதற்கு இயந்திரம் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் உங்களை பிணைத்துக்கொள்ளும்போது பிரசவ வலியை உணர முடியும்.  வெண்ணிலா எந்தச்சிரமமும் இல்லாமல் தன் எழுத்துக்கள் மூலமாகவே பெண்களின் எல்லா வலியையும் நமக்கு கடத்தி விடுகிறார்.

எல்லாப்பெண்களுக்கு எதிரிலும் ஒரு சில நாய்கள் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு நிற்கிறது. சில சமயம் குரைக்கிறது. சில சமயம் கடிக்கிறது இதைத்தான் இந்தப்புத்தகம் பேசுகிறது என்பதை அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

இதை அனைத்துப் பெண்களும் படிக்க வேண்டும். ஆண்கள் இரண்டு முறை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். 

இதைப்படிக்கிற பெண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர், மனம் திறந்து பேச
முடியாதவைகளைப் பற்றியெல்லாம் பேசியதற்கான நன்றியாக இருக்கும். ஆண்களின் கண்ணீல் துளிர்க்கிற நீர் அவர்கள் வீட்டு பெண்களிடம் காட்டப் போகும்  அன்பாக இருக்கும்.


Wednesday, 14 January 2015

ஆசிரியர்களுக்கு ஆசிரியர்..




இது நூல் விமர்சனம் அல்ல..

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே  புத்தகம் படித்த போது எனக்குள் அலையடித்த எண்ணங்களின் தொகுப்பு.

கவிஞர் முத்துநிலவன் எனக்கு தமிழாசிரியர்.

எட்டாவது படிக்கும்போது நான் நடத்திய ‘மலர்’ மாத இதழின் வெளியீட்டு விழாவில் நான் வரவேற்புரை பேச முடியாமல் அழுதபோது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உண்டு என்று என் மனச்சோர்வை நீக்கியவர்.

நாளைய
தமிழ் உலகம்
மாலை சூடப்போகும்
‘மலர்’ வரதுவுக்கு   என்று பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் எழுதி எனக்கு பரிசாக தந்தவர்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்த என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை கொடுத்து படிக்கச்சொன்னவர்.

எனக்கு இதழியல் பாடம் நடத்தியவர். லேஅவுட் சொல்லிக்கொடுத்தவர்.. மற்றவர்களிடம் எப்படிப்பழக வேண்டும் என்பது உட்பட. (யாரையாவது அறிமுகப்படுத்தினால் சும்மா பார்த்துக்கொண்டே நிற்பேன். அவர்கள் சென்றபிறகு வணக்கம் சொல்ல வேண்டும் என்று அன்பாக சொல்லித் தந்தவர்)

பிலிம் சொஸைட்டிக்கு அழைத்துச்சென்று திரைப்பட ரசனையை வளர்த்தவர். டிவி விளம்பரங்களை விழப்புணர்வோடு பார்க்க கற்றுத் தந்தவர்.

இப்படி அவர் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார் . எனக்கு அன்றிருந்த அறிவுக்குறைவினால் நான் கொஞ்சம்தான் கற்றுக்கொண்டேன்.

இன்று சென்னையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கம் அமைத்தது, அதில் குழந்தைகளின் திரைப்பட ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடுவது.. இப்படி என் எல்லா முயற்சிகளுக்கும் விதையிட்டவர்.

இன்று என் மகனை இந்த சமூகத்திற்கு பயன்படுகிறவனாக வளர்க்க வேண்டும் என்ற அக்கறையை நான் இவரிடம் இருந்துதான் பெற்றேன். இப்படிப்பட்ட எண்ணங்களை அவர் வகுப்பில் விதைத்தார். அப்படி சில எண்ணங்கள்தான் இப்போது புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது.

இவரைப்பற்றி தெரியாதவர்கள் கூட இந்தப்புத்தகத்தை படிக்கும்போது இவர் ஆசிரியர் என்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு கல்வி முறையில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...

நீ செய்வது தவறு அல்லது நீ சொன்னது தவறு என்பதை ஒருவரிடம்  நேரில் சொல்ல உங்களுக்கு மிகுந்த தைரியம் இருக்க வேண்டும். அரசுப்பணியில் இருந்து கொண்டு அரசின் தவறுகளை சொல்லும் தைரியத்தை அவருக்கு தமிழ்தான் கொடுத்திருக்க வேண்டும்.

எழுத்தில்தான் என்றில்லை நேரிலும் கூட தவறை சொல்லிவிடுவார்.  சங்கடப்படுவார்கள் என்பதைப்பற்றிய லேசான சங்கடத்தோடே கூட தவறை முகத்திற்கு நேரே எந்த இடத்திலும் சுட்டிக்காட்டிவிடுவார்.  இந்த இடத்திலும் அப்படித்தான்.

பல தனியார் பள்ளிகள் கல்விச்சாதனை செய்யாமல் கட்டணச்சாதனை செய்ததை அடித்துச்சொல்கிற கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது, ‘பாடத்திட்டத்தில் ஊடகம்.’ சினிமாவை,பத்திரிக்கைகளை,டிவியை கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி பேசும் இக்கட்டுரை என்னைக் கவர காரணம், இவை எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி வாழ்க்கையை அவர் கற்றுத்தந்ததே.

மாணவர்கள் வீடுகளுக்கு, அவர்கள் படிக்கிறார்களா என்பதை இரவிலும் அதிகாலையிலும் சென்று பார்த்ததை பற்றிய கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன்.

நான் படிக்கும்போது இப்படி செய்யவில்லை. அப்படி வந்திருந்தால் நான் விழித்துக் கொண்டிருந்திருப்பேனா? அல்லது உறங்கிக் கொண்டிருந்திருப்பேனா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவர் ஆசிரியப்பணியில் அரசு போட்டுத்தந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு சதுரம் போட்டவர் என்பதற்கு நானே சாட்சி.

மாணவர்கள் மேல் கல்வியின் மேல் ஆர்வமுள்ள இளம் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடப்புத்தகம். ஏனெனில் இவர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்.


என் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழ்நடைப்பிழைகள் கட்டுரையை இன்னும் விரிவு செய்து தனியாக ஒரு புத்தகமாக கொண்டு வாருங்கள். அனைவருக்கும் பயன்படும்.

அதே போல் மாணவர்களுடனான உங்கள் அனுபவங்களையும் தயவு செய்து தனி நூலாக கொண்டு வர வேண்டும். அது அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும்.

( அகரம் பதிப்பகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழாசிரியர் புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் வர விடலாமா?. ஐயாவின் உதவியையே நாடியிருக்கலாமே? )

முழு இரவையும் புத்தகத்தோடும் இனிய நினைவுகளோடும் செலவிட்ட மகிழ்ச்சியில்...


கிருஷ்ண. வரதராஜன்.


ரசித்து வாழ... படித்துப் பழகு

ஒரளவு தமிழ் வாசிக்கத்தெரிந்த குழந்தைகள் கையில் இந்தப்புத்தகம் கிடைத்துவிட்டால் நிச்சயம் நிறைய தமிழில் வாசிப்பார்கள். புத்தகங்களை நேசிப்பார்கள். 

நூல் : படித்துப்பழகு    நூலாசிரியர் :  மு.முருகேஷ்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது நான் நடத்திய மலர்  மாதஇதழின் பின்னால் இருந்து இயக்கியவர் அன்பு அண்ணன் மு.முருகேஷ்.  எப்போதும் உற்சாகம் இதுதான் அண்ணனின் அடையாளம்.

குரலுக்கு கூட ஒரு சுறுசுறுப்பு உண்டு என்பதை அவர் பேச்சிலிருந்துதான் உணர்ந்தேன். அண்ணனின் கையெழுத்தே கவிதையாக இருக்கும்.  

மாத இதழ் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர அதைப்பற்றிய எந்த அடிப்படையும் தெரியாததால் அண்ணன்தான் உண்மையிலேயே இதழ் ஆசிரியர். அக்கறையாக எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தவர்.

பிறகு ஆளுக்கொரு திசையாய் இடம் பெயர்ந்ததால் நடுவில் தொடர்புகள் தொடரவில்லை. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணனை அவரது வந்தவாசி வீட்டில் சந்தித்தேன். அது ஒரு மதிய நேரம். தனது மகளுக்கு கதைகளோடு கொஞ்சம் உணவையும் ஊட்டிக்கொண்டிருந்தார். 

நளன் சமைத்த உணவை ஊட்டியிருந்தால் கூட அப்பொழுது அந்தக்குழந்தை அண்ணன் சொன்ன கதைதான் ருசி என்று சொல்லியிருக்கும்.  அண்ணன் கதை சொன்ன விதம் அப்படி.

"இப்படிக் கதை உண்டு வளரும் குழந்தை நிச்சயம் இந்த உலகை உலுக்கும் வல்லமையோடுதான் வளரும். சரி நாளை இதுபோல என் குழந்தைக்கு கதை சொல்ல முடியுமா?"என்று அப்போது வருத்தப்பட்டேன்.

இப்பொழுது என் குழந்தைக்கும் அண்ணனே கதை சொல்லிவிட்டார். இல்லை எழுதிவிட்டார்.

குழந்தைகளை ஈர்க்கும் கதைகள். வாசிக்கத் தூண்டும் மொழிநடை. 

பத்து பதினைந்து வரிகளுக்குள் முடிந்து விடுகிற எளிய சுவாரஸ்யமான கதைகள். 

ஒவ்வொரு கதைக்கு கீழும் சில கேள்விகள். பார்த்தவுடன் பாடப்புத்தகம் போல இது என்ன கேள்விகள்? என்று  தோன்றியது. ஆனால் அதைப்படித்த என் மகன் ஆர்வமாக பதில் சொன்னதோடு சுய சிந்தனையை தூண்டும் கடைசிக்கேள்விக்கு  ஆர்வமாகவும் புதுமையாகவும் பதிலளித்தான். அப்போதுதான் புரிந்தது . அண்ணன் குழந்தைகளை எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கிறார் என்று. நன்றி மு.மு. 

புத்தக கண்காட்சிக்கு குழந்தையோடு செல்கிறவர்கள் இந்தப்புத்தகத்தோடு திரும்பி வந்தால் நிச்சயம் புத்தக கண்காட்சிக்கு சென்ற பயனை அடைவீர்கள்.














Sunday, 24 August 2014

புது வாசல்

நான்காவது ஆண்டாக சுதந்திரா ஹாலிடே ஸ்கூலில் சக்ஸஸ் சம்மர் கேம்ப் கொடைக்கானலில் நடைபெற்றது. ஒரு வார கேம்பில் ஒரு நாள் சைட் சீயிங் உண்டு. சைட் சீயிங் என்றவுடன் அனைவரும் பார்க்க விரும்பியது குணா கேவ் மற்றும் சூசைட் பாயிண்ட்.
குணா குகையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை கம்பி போட்டு மூடிவிட்டார்கள். ஆனாலும் கூட்டம் குவிகிறது. சினிமா மோகம் என்பதால் எனக்கு அதுகூட ஆச்சரியமில்லை. இந்த சூசைடு பாயிண்டை பார்ப்பதில் ஏன் இந்த ஆர்வம் என்பதுதான் எனக்கு ஆச்சரியம்.
சூசைட் பாயிண்ட் என்ற பெயரே தவறான வழிகாட்டுதலை தந்துவிடுகிறது என்பதால் அந்த இடத்தை இப்போது பசுமைப் பள்ளத்தாக்கு என்றே முன் மொழிகிறார்கள். ஆனாலும் மக்களுக்கு அது சூசைட் பாயிண்டுதான்.
எல்லோருமே அங்கே போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தோற்றுப் போன இடத்தில் நின்று நாங்கள் ஜெயிப்போம் என உறுதி எடுத்துக்கொள்கிறார்களோ?
இரண்டு கண்களாலும் ரசித்து முடியாத அளவிற்கு ஏராளமான இடங்கள் கொடைக்கானலில் இருந்தும் தற்கொலை முனைக்கு மட்டும் அளவில்லாத கூட்டம். அதைச் சுற்றி மட்டும் அதிக கடைகள்.
இவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கை பார்க்கும்போது பசுமைப்பள்ளத்தாக்கு என்பதை விட நம்பிக்கை பள்ளத்தாக்கு என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
இன்னும் எவ்வளவு வெட்டினாலும் அழிக்க முடியாது என்று வெட்ட வெட்ட துளிர்த்துக்கொண்டே இருப்பதை நம்பிக்கையோடு நமக்கு பறைசாற்றுகிறது அந்தப் பசுமை.
பள்ளத்தாக்கிலும் பாடம் படிக்கலாம். எது அழித்தாலும் எழுந்து நிற்போம் என்ற பாடம் சொல்வதால் அது இனிமேல் நம்பிக்கை பள்ளத்தாக்கு .