Saturday 31 August 2013

ஆசிரியர்களுக்கு

ஆசிரியர்களுக்கு,
இணையம் இரண்டு சவால்களை
முன்வைத்திருக்கிறது.

1:    ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்தப்போகும் பாடத்தைப்பற்றிய கூடுதல் தகவல்களை, ஆசிரியர்களை விட அதிகமாகவே விஷீவலாக தெரிந்து கொண்டு வகுப்பறைக்கு வரும் வாய்ப்பை இணையம் கொடுத்திருக்கிறது.
     ஏற்கனவே 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற மனப்பான்மை கொண்ட மாணவர்கள் இந்த இணைய வாய்ப்பின் மூலம் வகுப்பறையில் மேலும் எதிர்மறையாக நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
2:    ஆர்வமில்லாத மாணவர்களை, வலிமையான இணையத்தின் கவனச்சிதறல்களிலிருந்து மீட்டு, பாடங்களை மனதில் பதிய வைப்பதில் உள்ள சிக்கல் இரண்டாவது சவால்.
     இணையத்தில் ஒரு துறையைப் பற்றி தேடிப்போனால் அதைவிடவும் ஆர்வமுட்டக்கூடிய பிற துறை செய்திகள் கண்ணில் பட்டு எதை தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறக்க செய்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இத்தனை கவனச்சிதறல்களையும் தாண்டி மாணவ மனங்களில் பாடங்களை முதன்மை பெற வைப்பது எப்படி?
தங்கள் மாணவர்கள் பேஸ்புக்கில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்றும், இருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்’’ என்றும், இண்டர்நேஷனல் ஸ்கூல் ஒன்று தங்கள் பெற்றோர்களுக்கான சுற்றறிக்கை ஒன்றை மாணவர்கள் வசமே கொடுத்தனுப்பியிருக்கிறது.
மேலே சொன்ன இரண்டு சவால்களின் விளைவுதான் இந்த சுற்றறிக்கை.
இந்த சுற்றறிக்கையால் எந்த பயனும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகிகளிடம் பேசும்போது அறிந்தேன். ‘மறுக்கப்படும் எதுவும், மனித மனத்திற்கு கவர்ச்சியானதுஎன்ற என் அபிப்ராயத்தையும் பகிர்ந்து கொண்டேன்.
இந்த இரண்டு சவால்களுக்கும் ஒரே தீர்வுதான்.
இணையம் எதற்கானது என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும் வெறும் பொழுது போக்கு சாதனம் என்ற எண்ணத்தை மாற்றி கற்கும் உபகரணமாக மாற்ற வேண்டும்.

 பாடங்களை பற்றி அதிக தகவல்களை தேடி வந்து வகுப்பில் பகிர்ந்து கொள்ள ஆசிரியர்களே ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பேஸ்புக் அரட்டையைக் கூட கல்வியின் பக்கம் திருப்ப முடியும்.