Tuesday 3 February 2015

இசைப்போராளி

பா.ராகவன் எழுத்துக்களை படிப்பதில் எனக்கு கொஞ்சம் பயமிருக்கிறது. 

ஒரு முறை இவரது எக்ஸலெண்ட் படித்துவிட்டு எழுதுவதையே கொஞ்ச நாட்களுக்கு நிறுத்திவிட்டேன். எழுதினால் இப்படி எழுதவேண்டும் இல்லாவிட்டால் கூடாது என்று.

இப்பொழுதுதான் மறுபடி எழுதத் துவங்கியிருக்கிறேன். அதனால் இசைப்போராளி யானி புத்தகத்தை படிக்க தயக்கமாக இருந்தது.

யானிக்குள் கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டு வந்திருப்பார் போல பா.ரா. அவரின் எழுத்தில் காட்டாறாக துள்ளிச்செல்கிறது யானியின் வாழ்க்கை. பிறகு.. வாழ்க்கையை தன் போக்கில் கொண்டாடிக் கொண்டே காட்டாறாக ஒடியவனின் வாழ்க்கையை இப்படித்தானே எழுத முடியும்.

நீங்கள் படைப்பாளியாக இருந்து கலை இலக்கியம் என ஏதாவது ஒன்றில் உங்களை முழுமையாகக் கரைத்துக் கொள்ள மனதில் இன்னும் தடை இருந்தால் இந்தப்புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள்.

யானியின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமானதா.. இல்லை பா.ரா.தான் அப்படி எழுதிவிட்டாரா என்று மயங்குகிற அளவுக்கு போட்டி போடுகிறார் யானி எனும் இசை ராட்ஷசனோடு பா.ரா எனும் எழுத்து ராட்ஷசன்.

பிரபல கலைஞர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும்போது அவர்களிடம் இருந்த போதை பழக்க வழக்கங்களை பதிவு செய்துதான் ஆக வேண்டுமா? தவிர்த்து விடக்கூடாதா? என்று தோன்றுகிறது.

புகழ் பெற்றவர்கள் செய்யும் தவறுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன என்ற வாசகம்தான் நினைவில் வருகிறது.

ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றிபெற, கையில் பத்து பைசா கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிருபீத்துக் காட்டியவர் யானி. என்று போட்டிருக்கிறதே இது சரியா? என்றார் நண்பர்.

பணம் சம்பாதிப்பதா? இலட்சிய திசையா? என்று கேள்வி வருகிறபோது பணம்தான் என்று முடிவெடுத்து லட்சியத்தை பலர் காவு கொடுத்து விடுகிறார்கள். அல்லது லட்சிய திசையிலே பணம் சம்பாதித்தவுடன் ஒய்வெடுத்துவிடுகிறார்கள்.

யானி இதை இரண்டையும் எப்படிக் கடக்கிறார் என்பதை பதிவு செய்த வகையில் இதை வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல்  ஒரு சுயமுன்னேற்ற நூலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சொந்தமாக ஏதாவது முயற்சி செய்து பார். தோற்றாலும் பரவாயில்லை. தோற்கும் இடம் எது என்று தெரிந்துவிடும். பிறகு ஜெயிப்பது சுலபம். என்பது யானியின் அண்ணன் சொல்கிற மாதிரி தெரியவில்லை. பா.ரா அண்ணன் சொன்ன மாதிரிதான் தெரிகிறது. அப்படி இருக்கிறது அவரது பரவசத் தமிழ்.

நிச்சயம் இவன் உருப்பட மாட்டான் என உறுதியாக நம்பும் நம்ம ஊர் தந்தைகளை ஒருமாதிரி தந்தை என்றால் யானியின் அப்பாவை நிச்சயம் ஒரு ‘மாதிரி தந்தை’ எனலாம்.. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கிற போது தன் மகன் நிச்சயம் சாதிப்பான் என்று அவர் கொண்ட நம்பிக்கை நம்மை பிரமிக்க வைக்கிறது.

யானியின் இசையை கேட்டுவிட்டு இதைப்படியுங்கள். அல்லது படிக்கும்போது நடுவில் யானியை கேளுங்கள். இல்லையென்றால் நிச்சயம் படித்து முடித்தவுடன் நீங்களாகவே கேட்பீர்கள். யானியின் இசையைப்போலவே சுவாரஸ்யமானது இந்நூலும்..

2 comments:

  1. யானி பற்றிய புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். என் மகன் மூலமாக யனியைப் பற்றி அறிந்தேன். கடந்த ஆண்டு யானியின்இசைநிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது அதற்கு செல்ல வேண்டுமென்று அடம் பிடித்தான்.
    யானியின் இசை மயக்க வைக்கும் தன்மை உடையது என்பதை கேட்ட பொது அறிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. மூங்கில் காற்று இசையில் மயங்காமல் இருக்க முடியுமா என்ன? நன்றி

      Delete