Sunday, 3 May 2015

நீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்?


சந்தேகமே இல்லாமல் கமல் ஒரு ம்ருத்யஞ்சன்தான்.

பாடல் கேட்டவுடனேயே  பொழுதுபோக்கு பட வரிசை அல்ல என்று முடிவோடேதான் படத்திற்கு சென்றேன். அதனால் படம் எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

கமல்படம் எப்படியும் இருக்கும் என்ற மனநிலையோடுதான்  ரசிகர்கள் அவரை நெருங்குகிறார்கள். அதனால் அவர்களுக்கும் ஏமாற்றமிருக்காது என்றே தோன்றுகிறது.

இந்தப்படத்தை தவற விடக்கூடாது என்று நான் நினைப்பதற்கு காரணம் நமக்கும் மரணமுண்டு என்பதை மறந்து  மனிதர்களோடு உறாவடுவதை நாம் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறோம். அதைப்பற்றி படம் யோசிக்க வைக்கிறது.

சாதிக்கிற வேகத்தில் சம்பாதிக்கிற வெறியில் உடன் உள்ள உறவுகளின் உணர்வுகள் நமக்கு புரிவதில்லை. அதை கொஞ்சமாவது இந்தப் படம் உங்களுக்கு புரிய வைத்துவிடும்.

கமல் இந்தப்படத்தை கொஞ்சம் தள்ளி வைத்திருந்தால் கே.பி இதில் நடித்திருக்க முடியாது. இப்படித்தான் நம் வேலைகளை காரணமாக வைத்து அப்பாவோடு மனம்விட்டு பேச முடியாமல் மனைவியோடு சிரிக்க முடியாமல் குழந்தைகளோடு விளையாட முடியாமல் என பல உறவுகளை நாம் கொன்று கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் கமல் செய்வதைப்போலவே சாகப்போகும் நாம்தானே சாகாதவன் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம்.

நாளை செய்து கொள்ளலாம் என்று நாம் அதிகம் தவறவிடுவது மனித உறவுகளைத்தான்.  நாமும் இறப்போம். நம்மைச் சுற்றி உள்ளவர்களும் இறக்கப் போகிறார்கள். அதற்குள் கொஞ்சம் வாழ்ந்துவிடுவோம் என்பதை படம் அழகாகவே சொல்கிறது.


கமலுடைய வாழ்க்கைதான் கதையோ என்று பிரமை தட்டுகிற அளவுக்கு கமல் வாழ்க்கையோடு பொருந்திப்போகிறது நடிகர் பாத்திரம் முதல் இயக்குநர் பாத்திரம் வரை.  இப்படி ஒரு கதையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் ? 

கதையில் நடிகனுக்கு கடைசி படம். நிஜத்தில் இயக்குநருக்கு கடைசிப் படம்.

தேவையான அளவுக்கு சம்பாதித்து விட்டு அதன் பிறகு வாழவேண்டும் என்று நினைக்கிற பலர் அந்த எல்லைக்கோடு எங்கிருக்கிறது என்று தெரியாததால் கடைசி வரை சம்பாதித்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழமலேயே.. 

பல நேரங்களில் அன்பை சொற்களில்தான் புரிய வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த சொற்களையும் சொல்ல நேரமில்லாதவர்களாக மாறிவிட்டோம்.

நீங்கள் ஏன் கண்டிப்பாக உத்தமவில்லன் பார்க்க வேண்டும்? ஒரே ஒரு காரணம்தான், அது மனித உறவில் உள்ள புதிர்களை பேசுகிறது.. அதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறது..

மரணத்திற்கு பிறகு நாம் மனிதர்களுக்கு விட்டுச்செல்லப்போவது நினைவுகளை மட்டும்தான்.. அவை இனிமையாக இருக்கட்டுமே..

10 comments:

 1. புதிர்களை இனிமேல் தான் காண வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. கண்டு சொல்லுங்கள். கண்டதும் சொல்லுங்கள்.

   Delete
 2. ///மரணத்திற்கு பிறகு நாம் மனிதர்களுக்கு விட்டுச்செல்லப்போவது நினைவுகளை மட்டும்தான்.. அவை இனிமையாக இருக்கட்டுமே.///
  உண்மை உண்மை.

  ReplyDelete
  Replies
  1. அதிகம் பேர் உணர வேண்டிய உண்மை. பொய்யான பொருள்தேடலில் நாம் மறந்து விட்ட உண்மை.

   Delete
 3. ம்ருத்யஞ்சன் என்றால் என்ன ?

  ReplyDelete
  Replies
  1. மரணத்தை வென்றவன். பாடம் பாருங்கள் புரியும்.

   Delete
 4. தளத்தில் எப்படியாவது “ஃபாலோ திஸ் ப்ளாக் “ என்னும் பட்டையைச் சேர்க்கவும். அப்போதுதான் பதிவுகள் எழுதியவுடனே படிக்கக் கிடைக்கும். உன் பதிவுகளைத் தாமதமாகப் படிப்பதற்கு
  நான் பொறுப்பல்ல..

  ReplyDelete
  Replies
  1. ஐயா இன்றைக்குள் தேடி கண்டுபிடித்து சேர்த்துவிடுகிறேன். நன்றி.

   Delete
 5. படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், “தேவையான அளவுக்கு சம்பாதித்து விட்டு அதன் பிறகு வாழவேண்டும் என்று நினைக்கிற பலர் அந்த எல்லைக்கோடு எங்கிருக்கிறது என்று தெரியாததால் கடைசி வரை சம்பாதித்து கொண்டு மட்டுமே இருக்கிறார்கள் வாழமலேயே.. “ எனும் உனது வரிகள் என்னவோ செய்கின்றன. புதுமைப்பித்தன், மு.வ., ஜெயகாந்தன் போன்றவர்களின் படைப்புகளில் இப்படி ஏதாவது ஒரு வரி படைப்புகளிலிருந்து துருத்திக்கொண்டு, ஆனால் வாழ்வின் உண்மைகளை அறைந்து சொல்லிக்கொண்டு நிற்கும்... ஜெ.கா. அப்படிச் சொன்ன வரி ஒன்று- “ஆளு கெட்டுப்போகுறதுக்கு முன்னாடி பேரு கெட்டுப் போகாம பாத்துக்கணும்” உன் வரிகள் அர்த்தம் மிகுந்தவை வரது,

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எழுத பேனா கொடுத்தவர், எனக்கு படிக்க புத்தகங்கள் கொடுத்தவர், எனக்குள் தேசத்தின் மீது நேசத்தை விதைத்தவர் என் அன்புக்குரிய தமிழாசிரியர். அவர் அன்று விதைத்த வார்த்தைகள்தான் இப்பொழுது முளைத்து எழுகிறது.

   Delete