Saturday 28 February 2015

பள்ளியை மாணவன் தேர்ந்தெடுக்க வேண்டுமா? மாணவனை பள்ளி தேர்ந்தெடுக்க வேண்டுமா? .... அட்மிஷன் அக்கப்போர்

சமீபத்தில் நான் சந்தித்த பெற்றோர்கள் சிலரின் பேச்சு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.

சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படிக்க வைக்கத்தான் குழந்தைகளையே பெற்றுக்கொண்டார்கள் போல இருக்கிறது.

அவர்கள் பேச்சிலிருந்து அப்படித்தான் உணர்ந்தேன்.

ப்ரீ கே.ஜி அட்மிஷன் கிடைத்த அன்று அவர்கள் தங்கள் பிறவிப்பயனை அடைந்துவிட்டது போல நடந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு லட்சியம் இருக்கிறது. அது பணம் சேர்ப்பதாக இருக்கலாம். சிறந்த தலைமுறையை உருவாக்குவதாக இருக்கலாம்.

அதே போல ஒவ்வொரு பெற்றொருக்கும் தன் குழந்தைகள் குறித்து ஒரு கனவு  இருக்கிறது. அது அதிகம் பணம் சம்பாதிப்பவனாக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம். அல்லது அந்த தலைமுறையிலேயே தலைசிறந்தவராக தன் குழந்தை இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றித்தரும் கல்வி நிலையத்தையே நாடுகிறார்கள்.

மார்க் பள்ளிகளுக்கே மவுசு அதிகம்

பெரும்பாலான பெற்றோர்கள் அவநம்பிக்கையிலிருந்துதான் முடிவெடுக்கிறார்கள். "நாம்தான் சரியாக படிக்கவில்லை. நம் குழுந்தைகளுக்கு நல்ல கல்வியை தந்துவிட்டால் நாம் படும் கஷ்டமெல்லாம் அவர்கள் படமாட்டார்கள்" என்று உறுதியாக நினைக்கிறார்கள்.

கல்விக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் பெரிய தொடர்பில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது  படித்துவிட்டால் பொருளாதார ரீதியாக ஒரளவு நிச்சய வெற்றி என்று நம்புகிறார்கள்.

அதனால் மார்க் எடுக்க வைத்து மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் பள்ளிகள்தான் பலரின் முதல் தேர்வு.

அடுத்தது சமூக அந்தஸ்து. 

ஈரோட்டில் ஒரு சமூகத்தில் யாராவது மரணமடைந்துவிட்டால் எல்லோருக்கும் எளிதாக தெரிவிக்க  மரண அறிவிப்பு செய்வார்கள். கடைசி வரியில் பிரிவால் வாடுபவர்கள் பட்டியல் இருக்கும். அதில் எல்.கே.ஜி படிக்கும் பேரன் பெயர் அவன் படிக்கும் பள்ளியின் பெயரோடு வரும். 

காரணம் விசாரித்தபோது சொன்னார்கள் , "டாக்டர் என்பதை எப்படி கௌரவத்திற்காக போட்டுக்கொள்கிறோமோ  அதே போல அந்தப் பள்ளியில் படிப்பது ஒரு கௌவரம் இல்லையா? அதனால்தான் அப்படி போட்டுக்கொள்கிறோம்."

அரசுப்பள்ளிகளை பலரும் தவிர்ப்பதற்கு கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு மட்டும் காரணமில்லை. கௌரவம்?

இதைப்புரிந்து கொள்ள உங்கள் குழந்தை அரசுப்பள்ளியில் படிக்கிறது என்று ஐம்பது பேரிடம் சொல்லிப்பாருங்கள். உங்களைப் புழுவைப்போல பார்ப்பார்கள்.

பல பெற்றோர்களுக்கு பள்ளி என்பது அவர்கள் சமூக அந்தஸ்தை சொல்லும் ஒன்று.

அடுத்தது தீண்டாமை

தங்கள் குழந்தைகள் எந்த மாதிரியான குழந்தைகளோடு பழக வேண்டும் என்பதும் கல்வி நிலையத்தை தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களோடு அல்லது சாதாரணப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களோடு படித்தால் தகாதவார்த்தைகள் (Bad Words)  பேசக்கற்பார்கள் என்று தீண்டாமையை வேறுவிதமாக சொல்வார்கள்.

இதெல்லாம் பெற்றோர்கள் கல்வி நிலையத்ததை தேர்ந்தெடுக்கும் விதம்.


அடுத்து கல்வி நிலையங்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்.

முதலிடம் பணத்திற்குத்தான்.

பெற்றோர்கள் விரும்பும் வசதிகளை ( நன்றாக கவனியுங்கள் மாணவர்கள் விரும்பும் வசதியை அல்ல) செய்துவிட்டு அதற்கு ஏற்ற கட்டணத்தை தருகிற பெற்றொர்களின் குழுந்தைகளுக்குத்தான் முதலிடம்.

அடுத்து முதலுக்கு முதலிடம்

முதலிடம் உங்களுக்கு தெரியும். இரண்டாமிடம் கூட உங்களுக்கு தெரியும். ஆனால் முதலுக்கு முதலிடம் உங்களுக்குத் தெரியாது. அது கல்வி நிலையம் நடத்துகிறவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

அதாவது போட்ட முதலுக்கு ஏற்ற கூடம் வரவேண்டும் என்பதால் விருப்பம் இல்லாமல் சிலரை சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் பணம் கட்ட முடியாவிட்டாலும் நல்ல மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் மாநிலத்தில் முதலிடம் என பெயர் எடுத்து தங்கள் பள்ளிக்கு நல்ல அட்மிஷனை சேர்த்துக்கொடுக்க கூடிய நன்றாக படிக்கும் மாணவர்கள். 

அரசுப்பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்களை நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் இலவசமாக சேர்த்துக்கொள்வது இவ்விதம்தான்.

அடுத்த இடம் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்.

நன்றாகப்படிக்க வைக்கத்தானே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்று நீங்கள் பழங்கதை பேசலாம். இன்றைக்கு பல பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கத் தெரிந்தவர்களுக்கு பாடம் நடத்துகிற அளவுக்குத்தான் தெரியும். அதனால் நன்றாகப் படிக்கக்கூடியவனா என்று சோதித்துத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.

அடுத்தது ஆசிரியப் பெற்றோர்கள்.

அதாவது பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலும் படிக்க வைக்க வேண்டும்.

எப்போதாவது கரும்பு ஜீஸ் கடையில் கரும்பு பிழிவதைப் பார்த்திருக்கிறீர்களா? சக்கையாகும் வரை பிழிவார்கள். சரி நைந்து விட்டது தூக்கிப்போட்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கும்போது அதையும் பிழிவார்கள். அதைப்போல இவர்கள் நைந்து போகும் அளவிற்கு பள்ளியில் கற்றுத்தருவார்கள். அதன் பிறகு கசங்கிப்போகும் வரை குழந்தைகளை வீட்டிலும் வைத்து பிழியத் தெரியும் வித்தை தெரிந்த பெற்றோர்களாய் இருந்தால் சீட் நிச்சயம்.

இன்று பெற்றோர்கள் சில பள்ளிகளுக்கு ஆசைப்படுகிறார்கள். அலையாய் அலைகிறார்கள். அட்மிஷனுக்கு ஆள்பிடிக்கிறார்கள். பணத்தை கொட்டுகிறார்கள். ஆனால் பள்ளிகள்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 

பாடப் பரிவுகளை தேர்ந்தெடுப்பது போல, என்று மாணவர்கள் பள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வருகிறதோ ? அன்றுதான்  மாணவர்களுக்கு பிடித்த மாதிரி சுவைபட கல்வியை வழங்கும் முயற்சிகளை பள்ளிகள் மேற்கொள்ளும். 


Friday 27 February 2015

எச்சரிக்கை : கண்டிப்பாக வயதுக்கு வந்த ஆண்களுக்கு மட்டும்


புத்தகம் : போக யோகம். ஆசிரியரே இது ஆண்களுக்கு மட்டும்தான் என்று எழுதியிருக்கிறார்.

போகம் என்றால் பலருக்கு முதலில் செக்ஸ்தான் நினைவுக்கு வரும்.  ஆனால் இதில் எல்லா போகங்களைப்பற்றியும்  எழுதப்பட்டுள்ளது. 
உடலுக்கு உணவு கொடுக்கிறோம். அது போல உயிருக்கு கொடுக்கும் உணவுதான் போகம். அதையே ஒரு யோகமாக செய்யச் சொல்கிற புத்தகம்.

ஒஷோ சொன்னதைத்தான் இவரும் சொல்கிறார், ஆனால் சைவத்தை துணைக்கு வைத்துகொண்டு சொல்கிறார்.

அன்பில்லாமல் கூடுவது நோய் என்கிறார்.



புத்தகத்திலிருந்து சில வரிகள் :

விந்து விட்டவன் நொந்து கெட்டான்
விந்தே விடாதவன் வெந்து கெட்டான்     என்பார்கள்.

விந்து வெளியேற்றம் என்பது வேறு. விந்து விடுவது என்பது வேறு. மூடி இல்லாத ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தால் பாட்டில் நிரம்பி வழியுமே அதுபோல விந்தை வெளியேற்றினால் அது விந்து வெளியேற்றுவது ஆகும். இது ஆரோக்கியமான செக்ஸ்.

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அஃதின்பம்
கூடி முயங்கப் பெறின்"           என்பது நம் பாட்டன் மொழி.

கிறக்கம், மயக்கம் , முயக்கம் என்று தமிழில் மூன்று நிலைகள் உண்டு. நீண்ட நேரம் செக்ஸில் இயங்கி ஈடுபட்டு நாம் முயங்க வேண்டும், இல்லையேல் மயங்க வேண்டும். ஒரு போதும் கிறங்கக் கூடாது.

முயக்க நிலையில் செக்ஸ் இயக்கத்திற்கு பிறகு புத்துணர்வோடு இருப்போம். மயக்க நிலையில் புத்துணர்வோடு சோர்வும் கலந்த நிலையில் இருப்போம். கிறக்க நிலையில் செயலற்ற தன்மையில் இழக்கக்கூடாத ஒன்றை இழந்தது போல துவண்டு கிடப்போம்.

கிரக்க நிலைதான் விந்து விடுவது. இதனால் நொந்து கெடுவான்.

முயக்க நிலை என்பது என்பது விந்தை வெளியேற்றுவது...

இளைய தலைமுறை சிக்கிக்கடக்கும் பல விஷயங்களை எளிய முறையில் தாண்ட இந்தப்புத்தகம் உதவும். எல்லையில்லாமல் இணையத்தில் கொட்டிக்கிடக்கிற வெறி பிடிக்க வைக்கிற செக்ஸ் வீடியோக்களை  பார்கிற  இளைய தலைமுறைக்கு  இந்தப்புத்தகம் அவசியம் என்றே தோன்றுகிறது.

கதை விடற மாதிரி இருக்கே என்று சந்தேகப்படும் மொழி நடைதான் புத்தகத்தில் உள்ள பிரச்சனை.  சேலம் தாத்தா திட்டாமல் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனால் எதைச் சொல்லியும் பயமுறுத்தவில்லை.

குறி மேலாண்மை , குறியோகா என்றெல்லாம் தலைப்பிட்டு அதிரடிக்கிறார் ஆசிரியர்.


செக்ஸை பற்றி பேசுவதே பாவம் என்றும் இழிவானது என்றும் கருதும் சமூகத்தில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிய வாய்ப்பில்லை.  அப்படிப்பட்ட சூழலில் இந்தப்புத்தகம் எளிய ஒரு உதவி.


தேன் புட்டிக்குள் செல்லும் ஈயானது அந்த புட்டிக்குள் விழுந்து செத்துவிடாமல் பாதுகாப்பாக தேன் பருகி வரவேண்டும். அப்படி பாதுகாப்பாக தேன் பருகும் வித்தையை கற்றுத்தருவதே போக நெறி என்று அறிமுகப்படுத்தும் ஆசிரியர். அதை இந்த நூலின் மூலம் கற்றுத்தருகிறார்.



Monday 9 February 2015

நேர்மைக்கும் உண்மைக்கும் ஒரே தண்டனை

தவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்கிற தைரியம் இல்லாத கோழைகள் நாம். ஆனால் நல்லது நடக்கும்போது கை தட்டி பாராட்டுகிற தைரியமாவது இருக்கிறதா? என்றால், அதுவும் கூட இல்லை. அந்த அளவுக்கு கூட நமக்கு தைரியம் இல்லை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக திரு.சகாயம் அவர்கள் இருந்தபோது நடந்த சம்பவங்களின் பதிவுதான், சகாயம் செய்த சகாயம்.

சகாயம் போன்றவர்களை கொண்டாடுவது சகாயத்தை உற்சாகப்படுத்த
அல்ல இன்னும் சில சகாயம் உருவாகவேண்டும் என்ற அக்கறைதான்.

இது சகாயத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிற புத்தகம் அல்ல. நல்ல ஒரு நண்பனைப்போல சில நேரங்களில் முதுகில் தட்டியும் சில நேரங்களில் தலையில் குட்டியும் எழுதப்பட்டுள்ள சிறப்பான வரலாற்றுப்பதிவு.

மிக தைரியமாக தவறு செய்த அனைவரையும் பெயரோடு குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதை படிக்கும்போது பிரமிப்பு வருகிறது. பிரபல பத்திரிக்கைகளே பெயர் குறிப்பிடத் தயங்குகிற இடத்தில் மிகத்தைரியமாக இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது..
தவறு செய்கிற அனைவரையும் ஒருவர் விடாமல் குறி வைத்து தாக்குகிறார். நாம் உட்பட.. சில உதாரணங்கள் :
·          
எதுவும் செய்யாமல் இருப்பதையே விரும்பும் நம் சமூகம் ஏதாவது செய்தால் அதில் குறை காண்பதில் வெகு சமர்த்து.
·          
படித்தவர்களுக்கு எப்போதுமே தம் நலம் ஒன்றே குறிக்கோள். தலையை அக்கம் பக்கம் திருப்பவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

இப்படி பக்கத்திற்கு பக்கம் சாட்டையாக சுழல்கிறது அவரது எழுத்து.

சமூக ஆர்வலர்களுக்கும், சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவதற்கும் பரிசாக கொடுக்கப்பட வேண்டிய நூல் இது. வீட்டு நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் இது என்பதால் இரண்டு பிரதிகள் வாங்கிவிடுங்கள்.
·          
பெருமாள் முருகன் தன் முதுகெலும்பிலிருந்து தன் பேனாவை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் தவறுகளுக்கு எதிராக அது உறுதியாக நிற்கிறது.

அதனால்தான் எழுதமாட்டேன் என்று அந்தப்பேனா சொன்ன போது கூட அத்தனை பேர் எழுந்து நின்றார்கள்.

அதனால்தான் அதை உடைத்தெறிய ஒரு ஊரிலிருந்து இத்தனைபேர் ஆர்வத்தோடு கிளம்பினார்கள்.

இந்தப்புத்தகத்தை எழுதியதற்காகத்தான் அவர் விரல்களை நசுக்கத்துடிக்கிறார்கள் என்பது இந்தப்புத்தகத்தை படிக்கிற எல்லோருக்கும் புரிந்து விடும்.

நேர்மையாக வாழ்வதற்கும் உண்மையாக எழுதுவதற்கும் ஒரே தண்டனைதான்; அலைக்கழிப்பு.


பெருமாள் முருகனுக்கு இப்போது சகாயத்தின் மனநிலை இன்னுமே நன்றாக புரிந்திருக்கும்.

Sunday 8 February 2015

குழந்தைகளை வாழ விடுங்கள்.



குழந்தைகளை நாம் குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. 

குழந்தைகளாக வளரவிடுவதில்லை. குழந்தைகளை வளர்த்தெடுக்கிற அவசரத்தில் குழந்தைத்தனத்தை அடித்து நொறுக்கி காலி செய்துவிடுகிறோம்.

அதை மீட்க உதவியது இன்று ஞாநியின் வீட்டில் நடந்த கேணி சந்திப்பு. சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன் , விழியன் இருவருடனும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

குழந்தைகள் சிறுவர்கள் வாசிப்பிற்கு உள்ள தடைகள் பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது. கல்வி விளையாட்டு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் ஞானி சொன்ன ஒரு வரி அழகான கவிதை. 
வாசிப்பது என்பது மொழியுடனான விளையாட்டு. கதை சொல்வதும் கூட அப்படித்தான் என்று எனக்கு தோன்றுகிறது.

விழியன் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை தொட்டுப்பேசியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல் 450 மேற்பட்டு இருந்த குழந்தை சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சுருங்கி விட்டார்கள் என்பது. ஆங்கிலக்கல்வி தமிழ் வாசிப்பையும் அதன் விளைவாய் தமிழில் எழுதுவதையும் அழித்துவிட்டது.

அதை கதைகளின் வழியே மீட்டு விட முடியும் என்று எனக்கு இந்தக்கூட்டம் நம்பிக்கையளித்தது.

சிறுவர்களுக்காக எழுதுவதில் உள்ள பொறுப்புணர்சி பற்றி சரவணன் 
எறும்பின் கதையோடு விளக்கியது சிறப்பாக இருந்தது.

எழுதுவற்கான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் சிறுவர்களோடு பணியாற்றுவதிலிருந்தும் பெறுவதாக சொன்ன சரவணன். சிறுவர்களுக்கு கதை சொல்கிற தருணங்களில் அவர்கள் சட்டென்று ஒட்டிக்கொள்வது நம்பிக்கை கொள்வது தங்கள் மேல் உரிமை கொள்வது என அவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றி பேசிய போது யாருக்கும் சரவனோடு கதை சொல்ல கிளம்பிவிட தோன்றும்.

பள்ளிச்சிறுவர்களை மேகம் பார்க்க வைத்து பிறகு அதை வரைய வைத்து மேகத்திலிருந்து பெற்ற உருவங்களை வைத்து கதை சொல்ல வைத்து குழந்தைகளோடு உறவாடுகிற வாழ்க்கை நிச்சயம் எழுத்துக்கு இணையான தவம்தான். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் விழியன் இருவரும்.

இடையில் கிருஷ்ணப்பிரபு கதை சொல்லி பாட்டியை தன் பாணியில் வடை சுட வைத்தார். அதில் நரி வடையை காக்காவிடமிருந்து பெற்று பாட்டியிடம் சேர்க்கிறது. பரிசாக பாட்டியிடம் வடையையே பெறுகிறது.
நான் என் பங்கிற்கு அதை காக்காவிற்கே பரிசாக தருவதாக மாற்றினேன்.

இறுதியில் சரவணன் குழந்தைகளுக்காக கதை சொன்னார். இத்தனை நாளாக கதை சொல்வது என்றால் சொல்வது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சரவணன் அதை நிகழ்த்திக்காட்டினார்.

கதையின் குண்டுப்பையன் வருகிறபோது சரவணனும் குண்டாகிவிடுகிறார். கதையை முடித்த போது நல்லவேளையாக ஒல்லியாகிவிட்டார்.

எத்தனை பேர் குழந்தைகளுக்கு கதை சொல்கிறீர்கள் என்றபோது நான் பெருமையோடு கை தூக்கினேன். ஆனால் விஷ்ணுபுரம் சரவணன் கதை சொல்வதை பார்த்த பிறகு கதை சொல்வதன் அழகு புரிந்தது.

அவர் குழந்தைகளுக்கு மட்டும் கதை சொல்லவில்லை. வந்திருந்த எல்லோரையும் குழந்தைகளாக மாற்றி கதை சொன்னார்.
அத்வைத் சதானந்த் எஸ்.ராமகிருஷ்ணனின் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது சிறுகதையை அப்படியே சொல்லி அத்தனை பேரையும் அசத்தினான். நானும் அனுவும் நெகிழ்ந்த தருணம் அது.


இப்பொழுது நான் அத்வைத் சதானந்திற்கு விஷ்ணுபுரம் 
சரவணனைப்போலவே கதை சொல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். இதுதான் விழியன் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஞாநி எல்லோருக்கும் நான் நன்றி சொல்லும் விதம்.

Saturday 7 February 2015

இசைதான் கடவுளோடு பேசும் மொழி

 ஒரு நூல் இரண்டு விமர்சனம்


விமர்சனம் 1 : ( புதிதாக புத்தகம் படிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்காக )

உங்களுக்கு தெரிந்தது என்று சில இருக்கும். உங்களுக்கு தெரியாதது என்று சில இருக்கும். உங்களுக்கு தெரியாது என்பதே உங்களுக்கு தெரியாது என்று சில இருக்கும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் வாசிப்பு பழக்கம் நமக்கு உதவுகிறது.

கல்லில் நாதஸ்வரம் இருந்திருக்கிறது. அது கோவிலில் வாசிக்கப் பட்டிருக்கிறது. தெரியுமா உங்களுக்கு?

சினிமா பாடல் மட்டுமே இசை என்ற இசைக்குருடு நமக்கெல்லாம் வந்தபிறகு நாதஸ்வரக் கலைஞர்கள் கூட கல்லாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாவல் நம்மை உணரச்செய்ய முயற்சிக்கிறது.

நம் மண்ணை நம் வாழ்க்கையை நம் கலையை நாம் எப்படி எல்லாம் இழந்து வருகிறோம் என்று நாம் கவனிக்கத் தவறியதை இந்த நாவல் எழுதிச்செல்கிறது.

கலையில் உச்சம் தொட்டவர்கள் வாழ்வில் உச்சம் தொட நடத்தும் போராட்டத்தில் நாமும் கூட அவர்களை கண்டுகொள்ளாதவர்களாக அவமானப்படுத்தி வருகிறோம் என்பதை நீங்களாகத்தான் இதில் உணர வேண்டும்.

ஒரு கலைஞனுக்கு நேர்கிற அவமானங்களை பார்த்தீர்களா? என்று எழுத்தாளர் எங்கேயும் தன் எழுத்தை பயன்படுத்தி எடுத்துச்சொல்லவில்லை. அதை நீங்களாகத்தான் யோசித்து உணர வேண்டும்.

இது ஒரு பாதி நாவல். மீதியை நீங்கள்தான் எழுதவேண்டும்.

நாவல் முடிவில் தாளில் உள்ள அச்சிடப்படாத வெள்ளைக் காகிதம் வாசகன் கதையின் தன் பங்கை எழுதுவதற்காக என்று சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரமகிருஷ்ணன்.

இந்த நாவலில் மட்டும் பக்கத்துக்கு பக்கம் வாசகனுக்கு அவரோடு சேர்ந்து கதை எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதை ஓரே மூச்சில் வாசிக்காமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திடனும் கொஞ்ச நேரம் வாழ்ந்து பாருங்கள். அவர்களோடு வெய்யில் பிசுபிசுப்போடு கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருங்கள்.

புத்தகம் என்ற ஒன்றுக்கு நீங்கள் புதியவர் என்றால் கூட உங்களால் இந்த 375 பக்க நாவலை எளிதாக வாசித்துவிட முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

தீபாவளியின் போது எங்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மேள தாளத்துடன் வந்து  நாதஸ்வரம் வாசிப்பார்கள். 

குழந்தைகளாக நாங்கள் இருந்த போது எண்ணெய் தேய்து குளித்து அவர்களின் வாசிப்பு வருகைக்காக தயாராக காத்திருப்போம். சில வருடங்களில் அவர்கள் வரும்போதுதான் எழுந்துகொண்டோம். தூக்க கலக்கத்தோடே அவர்களை வரவேற்றோம். அடுத்த சில வருடங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டே இருந்தோம்.

அவர்கள் வருவது எப்போது நின்றுபோனது என்று இந்தப்புத்தகத்தை படித்து முடித்ததும் யோசித்த போது அவமானமாக இருந்தது.

கலைகள் கொண்டாடப்படாத தேசத்தில் கலைஞர்கள் மீண்டும் தோன்றுவதில்லை.

வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமல்ல தங்கள் உடம்பின் ஒரு பகுதியாக மூன்றாவது கையாகி விட்ட நாதஸ்வரத்தை தன்னோடு வைத்து எரித்து விடுங்கள் என்று சொல்கிற நிலையில்தானே அவர்களை வைத்திருக்கிறோம்.

மங்கள வாத்தியம் என்று புனிதப்படுத்திவிட்டு அதை ஏன் நாம் வாழ்விலிருந்து தள்ளி வைத்துவிட்டோம்.

திருடினவனுக்கு ஏழு வீட்டுச் சோறு போட்டு அனுப்பி வைப்பது என்ற உயர்ந்த பண்பாட்டையும் தாகத்தில் சாகிற நிலையில் தண்ணீர் கேட்டால் கொடுக்காத கீழ்மையையும் நாம் ஒருங்கே கொண்டிருக்கிறோம் என்பதை சஞ்சாரத்தை வாசிக்கும் போது புரிகிறது.

கல் யானை கூட நாதஸ்வரம் கேட்டு தன் காதுகளை ஆட்டியிருக்கிறது. இப்போதும் நாதஸ்வரம் இருக்கிறது. ஆனால் நாம் எல்லாம் கல்லாகி விட்டோம். நமக்கு கொஞ்சம் உயிர் தருகிறது சஞ்சாரம்.

விமர்சனம் 2 : ( எழுத்தை ரசித்து தேடித்தேடி வாசிப்பவர்களுக்காக )

சஞ்சாரத்தை சுலபமாக படித்து முடிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

முதலில் எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை மறந்துவிட்டு படிக்க வேண்டும்.

நாவல் பயணத்தில் நடுவில் வரும் பிற ஊர்களை தனியாக சிறுகதையாக பிறகு படித்துக் கொள்ள வேண்டும்.


( கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால் குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதாக எழுதும் எஸ்.ராவை இந்த வரியில்மட்டும்தான் கண்டுபிடிக்க முடிகிறது. )

Friday 6 February 2015

எதற்காக எழுதுகிறார் எஸ்.ரா.

எஸ்.ராவின் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு.

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற கதையின் மூலம்  எஸ்.ரா அவர்களின் ஊர் சுற்றலின் ஆழமும் அவர் வாசிப்பின் நீளமும் அவர் கண்ட வாழ்க்கையின் அகலமும் கடற்கரை மணல்போல  நம் கண் முன்னே விரிகிறது.

விக்டோரியா மகாராணி கேட்ட திரிசடை முத்துக்களை தேடி வரும் டக்ளஸ் பிராங் கடலை உணர்ந்தது போல நமக்கும் பல அபூர்வ தரிசனங்கள் புத்தகம் முழுக்க கிடைக்கிறது.

தரமணியில் கரப்பான் பூச்சிகள் சிறுகதை விற்பவன் வாங்குபவன் என எல்லோருடைய உளவியலையும் பேசுகிறது..

புர்ரா என்றொரு சிறுகதை. சின்னக்குழந்தைகள் உங்கள் வீட்டிலிருந்தால் தயவு செய்து இந்தக்கதையை படித்துவிடுங்கள். வாரம் ஒரு முறை கூட படியுங்கள். உங்கள் குழந்தைக்கு கொஞ்சம் வாழ நேரம் கிடைக்கும்.

இந்தக்கதையை புர்ரா என்று கத்திவிட்டு படிக்கத் தொடங்குங்கள். ஏனென்றால் படித்து முடித்ததும் நீங்கள் அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.

கணவன் மனைவி என இருவரும் வேலைக்குப் போகும் நகரங்களில் வாழ்பவர்களுக்கு குழந்தைகள்,  கொண்டாட்டமாக இருப்பதில்லை.

இரவில் குழந்தையின் அழுகை பொறுக்க முடியாமல் தலையணையால் முகத்தைப் பொத்திக்கொள்கிற தந்தை இதில் இருக்கிறார். அடுத்த சில வருடங்களில் கதைகளில் வருகிற தந்தைகள் குழந்தைகள் அழுதால் ஒருவேளை குழந்தையின் முகத்தை தலையணையால் அழுத்தக்கூடும். இயந்திர வாழ்க்கை கொடுக்கிற அழுத்தங்களில் அவர்கள் அதையும் செய்யக்கூடும்.

அதிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றன இந்தக்கதைகள். கே.கே நகரில் என் வீட்டு அருகில் உள்ள அத்தனை பெற்றோர்களுக்கும் இந்தக்கதையை பிரதியெடுத்து அளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பூமியில் சூரிய வெளிச்சம் படாத இடங்களைப்போலவே பேனா வெளிச்சம் படாத இடங்கள் இன்னும் பல வாழ்க்கையில் இருக்கிறது. எஸ்.ரா அதற்காகவே எழுதுகிறார்.

Thursday 5 February 2015

மீசை என்பது வெறும் மயிர். தாடி என்பது அறிவின் நீட்சி

நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்ற அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

நாளை வீடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்று கூட ஒரு தொகுப்பு வரலாம்.

"என்னையும் சேர்த்துக்கொண்டு வாழ இந்த உலகம் இன்னும் பழகவில்லை" என்ற எழுத்தாளர்களின் குரலுக்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்?

தலைப்பில் தொடங்கி பக்கத்திற்கு பக்கம் ஒங்கி ஒலிக்கிறது கலகக்குரல். நம்மை கலகலக்க வைக்கும் குரல். சான்றாக சில...

இந்நூல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதை எப்படியாவது பெற்றுவிடும் நோக்கில் மொழி பெயர்க்கப்பட்டதல்ல..

போர் முடிந்து விட்டதாக சொல்வதும் கூட போரின் ஒரு பகுதிதான்.

பிறந்து வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. மனதிலோ உதிர்ந்து கொண்டிருக்கிறது.

பட்டாளத்துக்கு புட்டு அவிப்பதைப்போல பதிப்பகங்களின் தேவைக்காக சில ‘இருமொழி இயந்திரங்கள்’ இயங்குவதை நானறிவேன்.

தேசியத்தின் பெயரால் அழிவுகள் நடக்கும்போது முடிந்த மட்டும் தேசத் துரோகியாக வாழ்வது அவசியம்

இப்படி இன்னும் நிறைய இருக்கிறது.

னிதக்காதலின் மகத்தான அடையாளமான தாஜ்மகால் போல புத்தகக் காதலின் மகத்தான அடையாளமாக ஈஜின் நூலகத்தின் பின்புலத்தில் உள்ள நிலவறை பற்றி படிப்பதற்காகவே இந்தப்புத்தகத்தை வாங்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

மொழி பெயர்ப்பாளர் கருத்துபதிவில் இனி வரப்போகும் எதிர்வினைகளுக்கும் சேர்த்து ஆதவன் இலக்கியச்சண்டை போட்டிருக்க வேண்டியதில்லை.   

மீசை என்பது வெறும் மயிர்.

இன்னமும் பெயரிடப்படாத நாடு ஒன்று உள்ளது.

உலகத்திலேயே புகைப்பழக்கமும் தீயணைப்புத்துறையும் இல்லாத ஒரே நாடு இதுதான். ஏனெனில் அங்கே நெருப்பே இல்லை.

ஏன் என்கிற கேள்விக்கு பின்னால் உள்ள புனைவு அடுக்கடுக்காய் அதிர்ச்சியடைய வைக்கிறது.

நாவல் செய்ய வேண்டிய வேலையை இந்த நாவல் சுருக்கமே செய்து விடுகிறது.

மொழி பெயர்ப்பாளர் குறிப்பில், குறிப்பிடுவது போல் ஏர்க்காலில் கண்டெடுத்த குலதெய்வத்தின் சிலையைத் தூக்கி வருவதுபோல உற்சாகத்தோடு தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு வந்திருக்கிறார் , ஆதவன் தீட்சண்யா.. மொழி பெயர்ப்பு முயற்சிக்கு வாழ்த்துக்கள் 

உங்கள் நாவலுக்காக காத்திருக்கிறோம்.
  

மீசை என்பது வெறும் மயிர்

சந்திப்பு  நேர்காணல்  நாவல் சுருக்கம்.


ஆசிரியர்: ஆதவன் தீட்சண்யா

வெளியீடு: சந்தியா பதிப்பகம்.எண், 77, 53வது தெரு,9வது அவென்யூஅசோக்நகர் சென்னை - 83
பக்: 176, விலை: ரூ.130


தலைப்பின் குறிப்பு

மீசை என்பது வெறும் மயிர்.  தாடி என்பது அறிவின் நீட்சி


காரணம் நந்திஜோதி பீம்தாஸ் ஆதவன் தீட்சண்யா நான் என எல்லோரும் தாடி வைத்திருக்கிறோம்.

Tuesday 3 February 2015

மகிழ்ச்சியான நிர்வாகம்

ஒரு நிமிட மேலாளர் என்கிற பொது தலைப்பில் வந்துள்ள வரிசையில் குறைவான மன உளைச்சல்  நிறைவான வெற்றி என்பதைப்பற்றி பேசுகிற புத்தகம்.

தங்களைப்பற்றி நல்லவிதமாக உணரும் மக்கள் நல்ல விளைவுகளை உருவாக்குகிறார்கள். எனவே ஒரு நிமிட மேலாளரின் வேலை தன் கீழ் வேலை பார்ப்பவர்களை அவ்வாறு உணரச்செய்வதுதான். அது எவ்வாறு என்பதை கதைப்பாணியில் புத்தகம் விளக்குகிறது.

மூன்று ரகசியங்கள் அதற்கான விளக்கங்கள் என புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

“உங்களுடைய பிரச்சனைகளை உங்களுடைய நேரத்தை உபயோகித்துத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய நேரத்தை உபயோகித்து அல்ல..” என்று ஒரு மேலாளர் சொல்லும்போது அவர் இன்னொருவரை தன் நிலைக்கு உயர்த்துகிறார். அதனால் அவர் ஒரு நமிட மேலாளர் ஆகிறார்.  புரியவில்லையா? புத்தகம் படியுங்கள். உயர்வீர்கள்.

முதலில் வித்தியாசமாகத் தெரிந்த மொழி நடை கதையோடு ஒன்றும்போது நாம் மொழிப்பெயர்ப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வையே நீக்கி விடுகிறது.

ஒரு கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ள நூல் என்று முகப்பில் உள்ள வரியை பார்த்து யாரும் விளம்பர உத்தி என்று நினைக்கலாம். ஆனால் படித்து முடித்ததும் புத்தகத்தில் உள்ள கருத்தின் தரமே அதை உண்மை என்பதை உறுதிபடுத்தும்.

ஒரு பணியாளர் தவறு செய்யும்போது அல்லது அதற்காக திட்டு வாங்கிய பிறகு அதிலிருந்து உடனே மீண்டு அவர் சிறப்பாக தன் வேலையை சிரித்தபடி தொடர்வார் என்றால் நீங்கள் நம்புவீர்களா.. நீங்கள் ஒரு நிமிட மேலாளர் என்றால் அது நிச்சயம் நடக்கும்.

உங்கள் கீழ் பணி புரியும் யார் மீதாவது நீங்கள் கோபப்பட்டால், “நான் செய்த செயலின் மீதுதான் கோபப்படுகிறார்களே தவிர என் மீது அல்ல” என்று அவர்கள் புரிந்து கொண்டால் அங்கே உறவுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதற்கு நீங்கள் நிச்சயம் ஒரு நிமிட மேலாளர் ஆக இருக்க வேண்டும்.

புத்தகத்தில் உள்ள அற்புதமான கருத்துக்களில் நாம் வியந்து ஆசிரியர்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது இவற்றை நாங்கள் யாரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம் என்ற பட்டியலை நன்றியுடன் அவர்கள் வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

புத்தகத்தில் இருந்து பெற வேண்டிய முதல் பாடமாக இதைத்தான் நான் நினைக்கிறேன்.

மலர்களை நாங்கள் பல்வேறு தோட்டத்திலிருந்து பறித்திருக்கிறோம். இந்தக் கதம்பத்தை தொடுத்தது மட்டும்தான் எங்கள் வேலை என்று சொல்லாமல் சொன்னாலும் அழகாக தொடுத்த விதத்தில் மலர்களை போலவே மனம் வீசுகிறது இவர்களின் எழுத்தும்.


படித்ததை கடைபிடித்து பார்ப்பதுதான் புத்தகங்களுக்கு செய்யும் மரியாதை. இந்த புத்தகத்தை வாங்கி கடைபிடித்த அனுபவத்தை எழுதினால் உங்களுக்கு இன்னொரு சிறப்பான புத்தகத்தை பரிசாக அளிக்க விரும்புகிறேன்.

இசைப்போராளி

பா.ராகவன் எழுத்துக்களை படிப்பதில் எனக்கு கொஞ்சம் பயமிருக்கிறது. 

ஒரு முறை இவரது எக்ஸலெண்ட் படித்துவிட்டு எழுதுவதையே கொஞ்ச நாட்களுக்கு நிறுத்திவிட்டேன். எழுதினால் இப்படி எழுதவேண்டும் இல்லாவிட்டால் கூடாது என்று.

இப்பொழுதுதான் மறுபடி எழுதத் துவங்கியிருக்கிறேன். அதனால் இசைப்போராளி யானி புத்தகத்தை படிக்க தயக்கமாக இருந்தது.

யானிக்குள் கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டு வந்திருப்பார் போல பா.ரா. அவரின் எழுத்தில் காட்டாறாக துள்ளிச்செல்கிறது யானியின் வாழ்க்கை. பிறகு.. வாழ்க்கையை தன் போக்கில் கொண்டாடிக் கொண்டே காட்டாறாக ஒடியவனின் வாழ்க்கையை இப்படித்தானே எழுத முடியும்.

நீங்கள் படைப்பாளியாக இருந்து கலை இலக்கியம் என ஏதாவது ஒன்றில் உங்களை முழுமையாகக் கரைத்துக் கொள்ள மனதில் இன்னும் தடை இருந்தால் இந்தப்புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள்.

யானியின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமானதா.. இல்லை பா.ரா.தான் அப்படி எழுதிவிட்டாரா என்று மயங்குகிற அளவுக்கு போட்டி போடுகிறார் யானி எனும் இசை ராட்ஷசனோடு பா.ரா எனும் எழுத்து ராட்ஷசன்.

பிரபல கலைஞர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும்போது அவர்களிடம் இருந்த போதை பழக்க வழக்கங்களை பதிவு செய்துதான் ஆக வேண்டுமா? தவிர்த்து விடக்கூடாதா? என்று தோன்றுகிறது.

புகழ் பெற்றவர்கள் செய்யும் தவறுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன என்ற வாசகம்தான் நினைவில் வருகிறது.

ஒரு மனிதன் தன் லட்சியத்தில் வெற்றிபெற, கையில் பத்து பைசா கூட இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிருபீத்துக் காட்டியவர் யானி. என்று போட்டிருக்கிறதே இது சரியா? என்றார் நண்பர்.

பணம் சம்பாதிப்பதா? இலட்சிய திசையா? என்று கேள்வி வருகிறபோது பணம்தான் என்று முடிவெடுத்து லட்சியத்தை பலர் காவு கொடுத்து விடுகிறார்கள். அல்லது லட்சிய திசையிலே பணம் சம்பாதித்தவுடன் ஒய்வெடுத்துவிடுகிறார்கள்.

யானி இதை இரண்டையும் எப்படிக் கடக்கிறார் என்பதை பதிவு செய்த வகையில் இதை வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல்  ஒரு சுயமுன்னேற்ற நூலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சொந்தமாக ஏதாவது முயற்சி செய்து பார். தோற்றாலும் பரவாயில்லை. தோற்கும் இடம் எது என்று தெரிந்துவிடும். பிறகு ஜெயிப்பது சுலபம். என்பது யானியின் அண்ணன் சொல்கிற மாதிரி தெரியவில்லை. பா.ரா அண்ணன் சொன்ன மாதிரிதான் தெரிகிறது. அப்படி இருக்கிறது அவரது பரவசத் தமிழ்.

நிச்சயம் இவன் உருப்பட மாட்டான் என உறுதியாக நம்பும் நம்ம ஊர் தந்தைகளை ஒருமாதிரி தந்தை என்றால் யானியின் அப்பாவை நிச்சயம் ஒரு ‘மாதிரி தந்தை’ எனலாம்.. மொத்த புத்தகத்தையும் படித்து முடிக்கிற போது தன் மகன் நிச்சயம் சாதிப்பான் என்று அவர் கொண்ட நம்பிக்கை நம்மை பிரமிக்க வைக்கிறது.

யானியின் இசையை கேட்டுவிட்டு இதைப்படியுங்கள். அல்லது படிக்கும்போது நடுவில் யானியை கேளுங்கள். இல்லையென்றால் நிச்சயம் படித்து முடித்தவுடன் நீங்களாகவே கேட்பீர்கள். யானியின் இசையைப்போலவே சுவாரஸ்யமானது இந்நூலும்..