Tuesday 3 February 2015

மகிழ்ச்சியான நிர்வாகம்

ஒரு நிமிட மேலாளர் என்கிற பொது தலைப்பில் வந்துள்ள வரிசையில் குறைவான மன உளைச்சல்  நிறைவான வெற்றி என்பதைப்பற்றி பேசுகிற புத்தகம்.

தங்களைப்பற்றி நல்லவிதமாக உணரும் மக்கள் நல்ல விளைவுகளை உருவாக்குகிறார்கள். எனவே ஒரு நிமிட மேலாளரின் வேலை தன் கீழ் வேலை பார்ப்பவர்களை அவ்வாறு உணரச்செய்வதுதான். அது எவ்வாறு என்பதை கதைப்பாணியில் புத்தகம் விளக்குகிறது.

மூன்று ரகசியங்கள் அதற்கான விளக்கங்கள் என புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

“உங்களுடைய பிரச்சனைகளை உங்களுடைய நேரத்தை உபயோகித்துத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய நேரத்தை உபயோகித்து அல்ல..” என்று ஒரு மேலாளர் சொல்லும்போது அவர் இன்னொருவரை தன் நிலைக்கு உயர்த்துகிறார். அதனால் அவர் ஒரு நமிட மேலாளர் ஆகிறார்.  புரியவில்லையா? புத்தகம் படியுங்கள். உயர்வீர்கள்.

முதலில் வித்தியாசமாகத் தெரிந்த மொழி நடை கதையோடு ஒன்றும்போது நாம் மொழிப்பெயர்ப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வையே நீக்கி விடுகிறது.

ஒரு கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ள நூல் என்று முகப்பில் உள்ள வரியை பார்த்து யாரும் விளம்பர உத்தி என்று நினைக்கலாம். ஆனால் படித்து முடித்ததும் புத்தகத்தில் உள்ள கருத்தின் தரமே அதை உண்மை என்பதை உறுதிபடுத்தும்.

ஒரு பணியாளர் தவறு செய்யும்போது அல்லது அதற்காக திட்டு வாங்கிய பிறகு அதிலிருந்து உடனே மீண்டு அவர் சிறப்பாக தன் வேலையை சிரித்தபடி தொடர்வார் என்றால் நீங்கள் நம்புவீர்களா.. நீங்கள் ஒரு நிமிட மேலாளர் என்றால் அது நிச்சயம் நடக்கும்.

உங்கள் கீழ் பணி புரியும் யார் மீதாவது நீங்கள் கோபப்பட்டால், “நான் செய்த செயலின் மீதுதான் கோபப்படுகிறார்களே தவிர என் மீது அல்ல” என்று அவர்கள் புரிந்து கொண்டால் அங்கே உறவுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அதற்கு நீங்கள் நிச்சயம் ஒரு நிமிட மேலாளர் ஆக இருக்க வேண்டும்.

புத்தகத்தில் உள்ள அற்புதமான கருத்துக்களில் நாம் வியந்து ஆசிரியர்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது இவற்றை நாங்கள் யாரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம் என்ற பட்டியலை நன்றியுடன் அவர்கள் வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

புத்தகத்தில் இருந்து பெற வேண்டிய முதல் பாடமாக இதைத்தான் நான் நினைக்கிறேன்.

மலர்களை நாங்கள் பல்வேறு தோட்டத்திலிருந்து பறித்திருக்கிறோம். இந்தக் கதம்பத்தை தொடுத்தது மட்டும்தான் எங்கள் வேலை என்று சொல்லாமல் சொன்னாலும் அழகாக தொடுத்த விதத்தில் மலர்களை போலவே மனம் வீசுகிறது இவர்களின் எழுத்தும்.


படித்ததை கடைபிடித்து பார்ப்பதுதான் புத்தகங்களுக்கு செய்யும் மரியாதை. இந்த புத்தகத்தை வாங்கி கடைபிடித்த அனுபவத்தை எழுதினால் உங்களுக்கு இன்னொரு சிறப்பான புத்தகத்தை பரிசாக அளிக்க விரும்புகிறேன்.

2 comments:

  1. **படித்ததை கடைபிடித்து பார்ப்பதுதான் புத்தகங்களுக்கு செய்யும் மரியாதை.** well said:)) எனக்கு ஒரு ஜோக் நினைவு வருகிறது.
    டாக்டர் : நான் சொன்ன மருந்தை முயற்சி செய்துமா சரியாகவில்லை??
    நோயாளி:ஆமாம் டாக்டர்! அந்த பாட்டிலில் அச்சடித்திருந்தத்தை அப்படியே பின்பற்றுகிறேன். ஆனாலும் சரியாகவில்லை.
    டாக்டர்: ஒ! அப்படி என்ன எழுதியிருக்கிறது??
    நோயாளி:பாட்டிலை இறுக்கமாக மூடிவைக்கவும் என்றிருந்தது. நான் இன்னும் திறக்கக்கூட இல்லை, டைட்டா மூடி வச்சுருக்கேன்:)

    படித்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்:) நன்றி!

    ReplyDelete