Saturday 7 February 2015

இசைதான் கடவுளோடு பேசும் மொழி

 ஒரு நூல் இரண்டு விமர்சனம்


விமர்சனம் 1 : ( புதிதாக புத்தகம் படிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்காக )

உங்களுக்கு தெரிந்தது என்று சில இருக்கும். உங்களுக்கு தெரியாதது என்று சில இருக்கும். உங்களுக்கு தெரியாது என்பதே உங்களுக்கு தெரியாது என்று சில இருக்கும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் வாசிப்பு பழக்கம் நமக்கு உதவுகிறது.

கல்லில் நாதஸ்வரம் இருந்திருக்கிறது. அது கோவிலில் வாசிக்கப் பட்டிருக்கிறது. தெரியுமா உங்களுக்கு?

சினிமா பாடல் மட்டுமே இசை என்ற இசைக்குருடு நமக்கெல்லாம் வந்தபிறகு நாதஸ்வரக் கலைஞர்கள் கூட கல்லாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாவல் நம்மை உணரச்செய்ய முயற்சிக்கிறது.

நம் மண்ணை நம் வாழ்க்கையை நம் கலையை நாம் எப்படி எல்லாம் இழந்து வருகிறோம் என்று நாம் கவனிக்கத் தவறியதை இந்த நாவல் எழுதிச்செல்கிறது.

கலையில் உச்சம் தொட்டவர்கள் வாழ்வில் உச்சம் தொட நடத்தும் போராட்டத்தில் நாமும் கூட அவர்களை கண்டுகொள்ளாதவர்களாக அவமானப்படுத்தி வருகிறோம் என்பதை நீங்களாகத்தான் இதில் உணர வேண்டும்.

ஒரு கலைஞனுக்கு நேர்கிற அவமானங்களை பார்த்தீர்களா? என்று எழுத்தாளர் எங்கேயும் தன் எழுத்தை பயன்படுத்தி எடுத்துச்சொல்லவில்லை. அதை நீங்களாகத்தான் யோசித்து உணர வேண்டும்.

இது ஒரு பாதி நாவல். மீதியை நீங்கள்தான் எழுதவேண்டும்.

நாவல் முடிவில் தாளில் உள்ள அச்சிடப்படாத வெள்ளைக் காகிதம் வாசகன் கதையின் தன் பங்கை எழுதுவதற்காக என்று சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரமகிருஷ்ணன்.

இந்த நாவலில் மட்டும் பக்கத்துக்கு பக்கம் வாசகனுக்கு அவரோடு சேர்ந்து கதை எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதை ஓரே மூச்சில் வாசிக்காமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திடனும் கொஞ்ச நேரம் வாழ்ந்து பாருங்கள். அவர்களோடு வெய்யில் பிசுபிசுப்போடு கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருங்கள்.

புத்தகம் என்ற ஒன்றுக்கு நீங்கள் புதியவர் என்றால் கூட உங்களால் இந்த 375 பக்க நாவலை எளிதாக வாசித்துவிட முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

தீபாவளியின் போது எங்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மேள தாளத்துடன் வந்து  நாதஸ்வரம் வாசிப்பார்கள். 

குழந்தைகளாக நாங்கள் இருந்த போது எண்ணெய் தேய்து குளித்து அவர்களின் வாசிப்பு வருகைக்காக தயாராக காத்திருப்போம். சில வருடங்களில் அவர்கள் வரும்போதுதான் எழுந்துகொண்டோம். தூக்க கலக்கத்தோடே அவர்களை வரவேற்றோம். அடுத்த சில வருடங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டே இருந்தோம்.

அவர்கள் வருவது எப்போது நின்றுபோனது என்று இந்தப்புத்தகத்தை படித்து முடித்ததும் யோசித்த போது அவமானமாக இருந்தது.

கலைகள் கொண்டாடப்படாத தேசத்தில் கலைஞர்கள் மீண்டும் தோன்றுவதில்லை.

வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமல்ல தங்கள் உடம்பின் ஒரு பகுதியாக மூன்றாவது கையாகி விட்ட நாதஸ்வரத்தை தன்னோடு வைத்து எரித்து விடுங்கள் என்று சொல்கிற நிலையில்தானே அவர்களை வைத்திருக்கிறோம்.

மங்கள வாத்தியம் என்று புனிதப்படுத்திவிட்டு அதை ஏன் நாம் வாழ்விலிருந்து தள்ளி வைத்துவிட்டோம்.

திருடினவனுக்கு ஏழு வீட்டுச் சோறு போட்டு அனுப்பி வைப்பது என்ற உயர்ந்த பண்பாட்டையும் தாகத்தில் சாகிற நிலையில் தண்ணீர் கேட்டால் கொடுக்காத கீழ்மையையும் நாம் ஒருங்கே கொண்டிருக்கிறோம் என்பதை சஞ்சாரத்தை வாசிக்கும் போது புரிகிறது.

கல் யானை கூட நாதஸ்வரம் கேட்டு தன் காதுகளை ஆட்டியிருக்கிறது. இப்போதும் நாதஸ்வரம் இருக்கிறது. ஆனால் நாம் எல்லாம் கல்லாகி விட்டோம். நமக்கு கொஞ்சம் உயிர் தருகிறது சஞ்சாரம்.

விமர்சனம் 2 : ( எழுத்தை ரசித்து தேடித்தேடி வாசிப்பவர்களுக்காக )

சஞ்சாரத்தை சுலபமாக படித்து முடிக்க இரண்டு வழிகள் இருக்கிறது.

முதலில் எழுதியது எஸ்.ராமகிருஷ்ணன் என்பதை மறந்துவிட்டு படிக்க வேண்டும்.

நாவல் பயணத்தில் நடுவில் வரும் பிற ஊர்களை தனியாக சிறுகதையாக பிறகு படித்துக் கொள்ள வேண்டும்.


( கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால் குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதாக எழுதும் எஸ்.ராவை இந்த வரியில்மட்டும்தான் கண்டுபிடிக்க முடிகிறது. )

1 comment:

  1. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே

    ReplyDelete