Sunday 8 February 2015

குழந்தைகளை வாழ விடுங்கள்.



குழந்தைகளை நாம் குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. 

குழந்தைகளாக வளரவிடுவதில்லை. குழந்தைகளை வளர்த்தெடுக்கிற அவசரத்தில் குழந்தைத்தனத்தை அடித்து நொறுக்கி காலி செய்துவிடுகிறோம்.

அதை மீட்க உதவியது இன்று ஞாநியின் வீட்டில் நடந்த கேணி சந்திப்பு. சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் விஷ்ணுபுரம் சரவணன் , விழியன் இருவருடனும் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

குழந்தைகள் சிறுவர்கள் வாசிப்பிற்கு உள்ள தடைகள் பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்தது. கல்வி விளையாட்டு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் ஞானி சொன்ன ஒரு வரி அழகான கவிதை. 
வாசிப்பது என்பது மொழியுடனான விளையாட்டு. கதை சொல்வதும் கூட அப்படித்தான் என்று எனக்கு தோன்றுகிறது.

விழியன் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை தொட்டுப்பேசியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல் 450 மேற்பட்டு இருந்த குழந்தை சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சுருங்கி விட்டார்கள் என்பது. ஆங்கிலக்கல்வி தமிழ் வாசிப்பையும் அதன் விளைவாய் தமிழில் எழுதுவதையும் அழித்துவிட்டது.

அதை கதைகளின் வழியே மீட்டு விட முடியும் என்று எனக்கு இந்தக்கூட்டம் நம்பிக்கையளித்தது.

சிறுவர்களுக்காக எழுதுவதில் உள்ள பொறுப்புணர்சி பற்றி சரவணன் 
எறும்பின் கதையோடு விளக்கியது சிறப்பாக இருந்தது.

எழுதுவற்கான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் சிறுவர்களோடு பணியாற்றுவதிலிருந்தும் பெறுவதாக சொன்ன சரவணன். சிறுவர்களுக்கு கதை சொல்கிற தருணங்களில் அவர்கள் சட்டென்று ஒட்டிக்கொள்வது நம்பிக்கை கொள்வது தங்கள் மேல் உரிமை கொள்வது என அவர்கள் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றி பேசிய போது யாருக்கும் சரவனோடு கதை சொல்ல கிளம்பிவிட தோன்றும்.

பள்ளிச்சிறுவர்களை மேகம் பார்க்க வைத்து பிறகு அதை வரைய வைத்து மேகத்திலிருந்து பெற்ற உருவங்களை வைத்து கதை சொல்ல வைத்து குழந்தைகளோடு உறவாடுகிற வாழ்க்கை நிச்சயம் எழுத்துக்கு இணையான தவம்தான். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் விழியன் இருவரும்.

இடையில் கிருஷ்ணப்பிரபு கதை சொல்லி பாட்டியை தன் பாணியில் வடை சுட வைத்தார். அதில் நரி வடையை காக்காவிடமிருந்து பெற்று பாட்டியிடம் சேர்க்கிறது. பரிசாக பாட்டியிடம் வடையையே பெறுகிறது.
நான் என் பங்கிற்கு அதை காக்காவிற்கே பரிசாக தருவதாக மாற்றினேன்.

இறுதியில் சரவணன் குழந்தைகளுக்காக கதை சொன்னார். இத்தனை நாளாக கதை சொல்வது என்றால் சொல்வது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சரவணன் அதை நிகழ்த்திக்காட்டினார்.

கதையின் குண்டுப்பையன் வருகிறபோது சரவணனும் குண்டாகிவிடுகிறார். கதையை முடித்த போது நல்லவேளையாக ஒல்லியாகிவிட்டார்.

எத்தனை பேர் குழந்தைகளுக்கு கதை சொல்கிறீர்கள் என்றபோது நான் பெருமையோடு கை தூக்கினேன். ஆனால் விஷ்ணுபுரம் சரவணன் கதை சொல்வதை பார்த்த பிறகு கதை சொல்வதன் அழகு புரிந்தது.

அவர் குழந்தைகளுக்கு மட்டும் கதை சொல்லவில்லை. வந்திருந்த எல்லோரையும் குழந்தைகளாக மாற்றி கதை சொன்னார்.
அத்வைத் சதானந்த் எஸ்.ராமகிருஷ்ணனின் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது சிறுகதையை அப்படியே சொல்லி அத்தனை பேரையும் அசத்தினான். நானும் அனுவும் நெகிழ்ந்த தருணம் அது.


இப்பொழுது நான் அத்வைத் சதானந்திற்கு விஷ்ணுபுரம் 
சரவணனைப்போலவே கதை சொல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். இதுதான் விழியன் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் ஞாநி எல்லோருக்கும் நான் நன்றி சொல்லும் விதம்.

2 comments:

  1. குழந்தைகள் ரசிப்பதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகளை ரசிப்பவர்களை ரசிப்பது குழந்தைகளை ரசிப்பதற்கு இணையானது.

      Delete