Monday 9 February 2015

நேர்மைக்கும் உண்மைக்கும் ஒரே தண்டனை

தவறு நடக்கும்போது அதை தட்டிக்கேட்கிற தைரியம் இல்லாத கோழைகள் நாம். ஆனால் நல்லது நடக்கும்போது கை தட்டி பாராட்டுகிற தைரியமாவது இருக்கிறதா? என்றால், அதுவும் கூட இல்லை. அந்த அளவுக்கு கூட நமக்கு தைரியம் இல்லை.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக திரு.சகாயம் அவர்கள் இருந்தபோது நடந்த சம்பவங்களின் பதிவுதான், சகாயம் செய்த சகாயம்.

சகாயம் போன்றவர்களை கொண்டாடுவது சகாயத்தை உற்சாகப்படுத்த
அல்ல இன்னும் சில சகாயம் உருவாகவேண்டும் என்ற அக்கறைதான்.

இது சகாயத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிற புத்தகம் அல்ல. நல்ல ஒரு நண்பனைப்போல சில நேரங்களில் முதுகில் தட்டியும் சில நேரங்களில் தலையில் குட்டியும் எழுதப்பட்டுள்ள சிறப்பான வரலாற்றுப்பதிவு.

மிக தைரியமாக தவறு செய்த அனைவரையும் பெயரோடு குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதை படிக்கும்போது பிரமிப்பு வருகிறது. பிரபல பத்திரிக்கைகளே பெயர் குறிப்பிடத் தயங்குகிற இடத்தில் மிகத்தைரியமாக இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது..
தவறு செய்கிற அனைவரையும் ஒருவர் விடாமல் குறி வைத்து தாக்குகிறார். நாம் உட்பட.. சில உதாரணங்கள் :
·          
எதுவும் செய்யாமல் இருப்பதையே விரும்பும் நம் சமூகம் ஏதாவது செய்தால் அதில் குறை காண்பதில் வெகு சமர்த்து.
·          
படித்தவர்களுக்கு எப்போதுமே தம் நலம் ஒன்றே குறிக்கோள். தலையை அக்கம் பக்கம் திருப்பவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை.

இப்படி பக்கத்திற்கு பக்கம் சாட்டையாக சுழல்கிறது அவரது எழுத்து.

சமூக ஆர்வலர்களுக்கும், சமூக அக்கறை உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவதற்கும் பரிசாக கொடுக்கப்பட வேண்டிய நூல் இது. வீட்டு நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய புத்தகம் இது என்பதால் இரண்டு பிரதிகள் வாங்கிவிடுங்கள்.
·          
பெருமாள் முருகன் தன் முதுகெலும்பிலிருந்து தன் பேனாவை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் தவறுகளுக்கு எதிராக அது உறுதியாக நிற்கிறது.

அதனால்தான் எழுதமாட்டேன் என்று அந்தப்பேனா சொன்ன போது கூட அத்தனை பேர் எழுந்து நின்றார்கள்.

அதனால்தான் அதை உடைத்தெறிய ஒரு ஊரிலிருந்து இத்தனைபேர் ஆர்வத்தோடு கிளம்பினார்கள்.

இந்தப்புத்தகத்தை எழுதியதற்காகத்தான் அவர் விரல்களை நசுக்கத்துடிக்கிறார்கள் என்பது இந்தப்புத்தகத்தை படிக்கிற எல்லோருக்கும் புரிந்து விடும்.

நேர்மையாக வாழ்வதற்கும் உண்மையாக எழுதுவதற்கும் ஒரே தண்டனைதான்; அலைக்கழிப்பு.


பெருமாள் முருகனுக்கு இப்போது சகாயத்தின் மனநிலை இன்னுமே நன்றாக புரிந்திருக்கும்.

2 comments:

  1. நேர்மையாக வாழ்வதற்கும் உண்மையாக எழுதுவதற்கும் ஒரே தண்டனைதான்; அலைக்கழிப்பு.
    உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  2. அந்த உண்மையை மாற்றுவதற்கும் நாம் தொடர்ந்து எழுதுவோம்

    ReplyDelete