Friday, 15 May 2015

36 வயதினிலே ...படம் ஆண்களுக்கான பா)டம்


திருமணமான புதிதில் நாங்கள் முதன் முதலில் பார்த்த படம் 'திருட்டுப்பயலே.' (எதுவும் குறீயிடாக இருக்குமோ?)

அப்பொழுது தொடங்கி இப்பொழுது வரை பெரும்பாலும் நான் அழைத்து சென்ற படங்கள் தலையில் அடித்துக்கொள்ளும் ரகம்தான். 

பாராட்டும் படி ஒரு படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இந்த முறை முதல் நாள் முதல் ஷோ 36 வயதினிலே அழைத்துச் சென்றேன்.

36 வயதில் வருகிற பிரச்சனையை பற்றி வரும் படமாக இருக்கும் என்று நினைத்தால் பெண்களுக்கு எப்போதும் பிரச்சனையாக இருக்கிற கணவர்கள் பற்றிய படம்.

ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்?இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.

பெண்களின் கனவு காலவதியாகும் நாள் திருமண நாள்தானோ ?

திருமணத்திற்கு முன் என் மனைவியிடம் பேச ஆரம்பித்த நாளிலிருந்தே என் கனவுகள் இலட்சியங்கள் என்று எவ்வளவோ பேசியிருக்கிறேன். ஆனால், 'உன் கனவுகள் என்ன?' என்று கேட்டதேயில்லை.

திருமணமான நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் நாங்கள் நடத்தும் ஒரு கோடை முகாமில் கேம்ப் பையரில் அவர் நடனம் ஆடும் வரை அவளவு நளினமாக நடனம் ஆடுவார் என்பதே எனக்கு தெரியாது. 

அதற்காக இப்போது வரை நான் வருத்தப்படுகிறேன்.

திருமணமான புதிதில் எங்கள் குடும்பத்தை பற்றி திட்டமிடும்போது "ஒரு ஆண் குழந்தை. ஒரு பெண் குழந்தை" என்று என் விருப்பத்தை சொன்ன போது "இன்னொரு குழுந்தையை நாம் தத்தெடுத்துக்கொள்ளலாம்" என்றார் என் மனைவி. 

இப்பொழுது யோசித்தால் கூட அந்த விசாலமான மனது எனக்கு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. 

"என் குழந்தையைத்தானே என் குழந்தையாக நினைக்க முடியும். இன்னொரு குழந்தையை எப்படி என் குழந்தையாக நினைக்க முடியும்?" என்று நான் கேட்ட நொடியிலிருந்து அவரது கனவுகள் காலாவதியாகத் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு தாடியில் நரை விழுந்த போது சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிற நான் மனைவிக்கு வந்தபோது கிழவி என்று கிண்டல் செய்கிறேன்.

ஜாலியாக கேலி செய்கிறோம் என்று நினைத்து நாம் எப்படியெல்லாம் விளையாட்டாக புண்படுத்தி விடுகிறோம்.

திருமணமான சில வருடங்களில் தீடிர் தீடிர் என்று, நம் திருமண நாள் சொல்லுங்க?  என் பிறந்தநாள் என்னைக்கு சொல்லுங்க? என கேட்கும்பொழுதெல்லாம் எல்லா தேர்வுகளிலும் விழிப்பது போலவே வழித்திருக்கிறேன்.

காதலியின் விருப்பங்களை கண்டறிந்து நிறைவேற்றுவதே வாழ்வின் நோக்கம் என

எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக. எனக்காகவேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் மனைவியும் மகிழ்ச்சியாக என்பதிலேயே நான் திருப்தியடைந்துவிட்டேன்.

அவருடைய வாழ்க்கையை அவருடைய கனவுகளுக்காக அவர் எப்பொழுது வாழப்போகிறார்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

வாருங்கள் சேர்ந்து பதில் தேடுவோம். அதற்கு முன் மனைவியோடு ஒரு ஸெல்பி எடுத்துக் கொள்வோம்.( பின் குறிப்பாக ஒரு நன்றி : படம் முழுவதும் வசனங்களால் நம் கன்னத்தில் அறைகிற விஜிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.. )

( பின் குறிப்பாக ஒரு தகவல் : சினிமா விமர்சனம் என் முந்தைய பதிவில் )

1 comment:

  1. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

    ReplyDelete