Monday, 4 May 2015

என்னை தப்பிக்க வைத்த குரங்காட்டி

ஆறாவது படிக்கும்போதுதான் எனக்கு கல்வியால் முதன் முறையாக மூச்சு திணற ஆரம்பித்தது.. 

ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு விளையாடுவதற்காகத்தான் சென்றேன். ஏதோ கொஞ்சம் பாடமும் நடத்துவார்கள். நான் படிக்கிறேனா என்று ஆசிரியர்கள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. பள்ளிக்கு சென்றாலே படிக்கிறவன்தான் என்கிற அளவுக்கு என் பெற்றோர்களும் இருந்துவிட்டார்கள்.

ஐந்தாம் வகுப்பு லீவுக்கு வீட்டிற்கு வந்த ஆசிரியராக இருக்கும் உறவினர் எல்லாப் படத்திலும் டெஸ்ட் வைக்க எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதே அப்போதுதான் தெரிந்தது...

ஆறாம் வகுப்பிற்காக நான் சேர்ந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியர் எனக்கு ஒவ்வொரு நாளும் அதை உணர்த்தினார்.

ஒவ்வொரு நாளும் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகரித்துக்கொண்டே போனது... சுருங்கிக்கொண்டே இருந்தேன்.

எட்டாவது படிக்கும்போது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து பத்திரிக்கை நடத்துவது என்று முடிவு செய்தோம்.

நான்கு பேரில் அதிகம் படித்தவன் நான்தான்.

ஆமாம் சிறுவர்மலர், காமிக்‌ஸ் துவங்கி துளிர் வரையில் ஒன்றுவிடாமல் நன்றாக படித்தவன்..

அதனால் மாதிரி இதழ் தயாரிக்கிற பொறுப்பு என் வசம் வந்தது. நான் படித்ததை எல்லாம் கலக்கி அடித்து ஒன்றை தயார் செய்தேன். எங்கள் தமிழாசிரியரிடம் கொண்டு போய் காட்டினோம்.  

பாராட்டிவிட்டு, “மாலையில் வீட்டுக்கு வாங்கடா.. நிறைய பத்திரிக்கைகள் தருகிறேன். முதலில் நிறைய படியுங்கள். பிறகு நிறைய படையுங்கள்.. பத்திரிக்கை சிறக்க வாழ்த்துக்கள்” என்றார்.

மாலையில் அவர் கொடுத்த பல சிற்றதழ்களை அன்றைக்கு இரவுக்குள் படித்து முடித்தபோது நான் தயாரித்த மாதிரி இதழ் எனக்கே பிடிக்காமல் போய்விட்டது..

அடிக்கடி ஆசிரியர் வீடு பிரிண்டிங் பிரஸ் என கல்வி தாண்டி வெளியில் செல்வதற்கு யார் வீட்டிலும் அனுமதிக்காததால் நண்பர்கள் கழண்டு கொள்ள நானே நண்பகளுக்கும் சேர்ந்து செயல்பட்டேன்.

தமிழாசிரியர் வழிகாட்டுதலோடு மலர் என்ற மாத இதழ் அச்சு இதழாக உருவானது..

வெளீயிட்டு விழாவில் வரவேற்புரை சொல்ல முடியாமல் அவமானத்தில் அழுதுவிட்டேன்..

விழாவிற்கு தலைமையேற்றிருந்த என் தமிழாசிரியர் எழுந்து சொன்னார்.. "பேசினால்தான் திறமை என்றில்லை. ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. இப்படி ஒரு பத்திரிக்கை துவங்கியிருப்பது கூட ஒரு திறமைதான். பயிற்சியால் எல்லாவற்றையும் வளர்த்துக்கொள்ள முடியும்" என்றார்.

அன்று நம்ப முடியவில்லை.

ஆனால் இன்று ஆயிரக்கணக்காணவர்கள் கூடும் கூட்டங்களில் பேசுகிறேன். பத்து புத்தகம் எழுதிவிட்டேன்.. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி செய்கிறேன். 

பள்ளிக்கூடம் என்னை நசுக்கிவிடாமல் பார்த்துக்கொண்ட என் ஆசிரியரால்தான் இத்தனை அற்புதங்களும் நடந்தது..

பிலிம் சொஸைட்டியில் என்னை உறுப்பினராக்கி உலகத்திரைப்படங்களை அறிமுகப்படுத்தினார். உள்ளூரிலும் வெளியூரிலுமாக எங்கு இலக்கிய கூட்டங்கள் நடந்தாலும் என்னை அழைத்துச் செல்வார். 

எட்டாவது படிக்கும்போதே பத்திரிக்கை நடத்துகிறாரா என்று பலரும் என்னை விழி விரிய பார்க்க நானும் விரிய ஆரம்பித்தேன்.

என்னை சுருங்கிவிடாமல் பார்த்துக்கொண்ட அவரை ஆசிரியர் என்று சுருக்கிவிடமுடியாது. பதின் பருவ குழப்பங்களில் இருந்த எனக்கு அவர் அப்பாவாகவும் இருந்தார். 

இன்று யோசித்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. பல நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கியிருக்கிறேன்.

அவர் எனக்கு செய்த எல்லாவற்றையும் இன்று நான் சமூகத்திற்கு திரும்பி செய்கிறேன். என் வீட்டை எல்லோரும் வந்து தங்குமிடமாக வைத்திருக்கிறேன்.  குழந்தைகளின் திரைப்பட ரசனையை வளர்க்க மாதமாதம் எங்கள் சாதனாவில் உலக திரைப்படங்கள் திரையிடுகிறோம். எழுத்தாளர்களை கொண்டாடுகிறோம்.

அவர் விதைத்தவைகள்தான் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்று தி இந்து பத்திரிக்கையில் பேராசிரியர் ச.மாடசாமி எழுதி தப்பித்த குரங்குகள் எனும் கட்டுரை வந்திருக்கிறது. நானும் ஒரு தப்பித்த குரங்குதான்.

என்னை தப்பிக்க வைத்த குரங்காட்டி புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துநிலவன்.  

திண்டுகல் லியோனி பட்டிமன்றங்களில் எல்லாம் இவரை நீங்கள் பார்க்கலாம்.

எல்லாப் பள்ளிகளிலும் இப்படி நிறைய பேர் குரங்குகளை தப்பிக்க வைத்தால் இந்த நாடு இன்னும் நன்றாக இருக்கும்.


5 comments:

 1. முத்து நிலவன் ஐயாவிற்கு (ம்) வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. படி படி என்று வார்த்தைகளையே குச்சியாக காட்டி மிரட்டும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இன்றைய தலைமுறைக்கு இப்படிப் பட்ட இனிய அனுபவங்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதனால்தான் எங்கள் ஆசிரியரைப் போன்றவர்களை நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது. அதிலிருந்து இன்றைய ஆசிரியர்கள் சிலரேனும் ஊக்கம் பெறுவார்கள். நன்றி.

   Delete
 2. கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்

  ReplyDelete
  Replies
  1. அன்றைய ஆசிரியர்கள் குறும்பு செய்யும் மாணவர்களை இழுத்து பிடித்து திருத்தினார்கள். இன்றைய ஆசிரியர்கள் மேல விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அதை மாற்றுவதற்காக ஐயாவை போற்றுவோம். நன்றி.

   Delete
 3. பதிவு பார்த்தேன் வரது. எனது தமிழாசிரியப் பணியில் சந்தித்த பலஆயிரம் குரங்குகளில் தப்பித்த ஒரு சில குரங்குகள் பற்றிய நினைவு வந்து நெட்டுயிர்த்தேன். (அதிலும் நீ என் செல்லக்குரங்கல்லவா?) உன் சுயமுயற்சி அளவிற்கு எனது தூண்டுதல் முயற்சி இருந்ததில்லை என்பதை இப்போதும் உணர்கிறேன். உன் சுயகல்வித்தாகம் அடங்காது. அது தொடர வேண்டும் அதையே இந்தச் சமூகத்திற்கும் நீ ஏற்படுத்த முயல வேண்டும். (உன் தளத்தின் முகப்பில் உள்ளது போல “முயற்சிக்க“ அல்ல. அது தமிழ்ச் சொற்களின் தவறான பயன்பாடுகளில் ஒன்று பார்த்தாயா? இப்போதும் நான் தவறு காண்கிறேன், உனது ஏராளமான பயன்படு செயல்கள் என்றும் வளர்க)
  உன் புதிய “ படிக்கும் பெற்றோர்களின் கதை“ நூலைப் படித்துவிட்டு உன்னை அழைப்பேன். உன் பணி தொடர வாழ்த்துகள். அன்புடன்- என்றும் உன் -
  குரங்காட்டி நண்பன்.
  பி.கு.1- கடந்த ஆண்டு, நம் வீட்டிலிருந்து நீ எடுத்துச்சென்ற சுஜாதாவின் “கற்றதும் பெற்றதும்“ நூல் இன்னும் வரல...! வட போச்சே!தானா? சரி விடு! எனக்கு வேறு ஏதாவது நல்ல புத்தகம் ஒன்று வாங்கி வா.
  பி.கு-2 சென்னை வரும்போது சந்திக்கிறேன். என் மகள், பேரனின் நலமறிய ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete