Wednesday, 14 January 2015

ஆசிரியர்களுக்கு ஆசிரியர்..
இது நூல் விமர்சனம் அல்ல..

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே  புத்தகம் படித்த போது எனக்குள் அலையடித்த எண்ணங்களின் தொகுப்பு.

கவிஞர் முத்துநிலவன் எனக்கு தமிழாசிரியர்.

எட்டாவது படிக்கும்போது நான் நடத்திய ‘மலர்’ மாத இதழின் வெளியீட்டு விழாவில் நான் வரவேற்புரை பேச முடியாமல் அழுதபோது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உண்டு என்று என் மனச்சோர்வை நீக்கியவர்.

நாளைய
தமிழ் உலகம்
மாலை சூடப்போகும்
‘மலர்’ வரதுவுக்கு   என்று பாரதியார் கவிதைகள் புத்தகத்தில் எழுதி எனக்கு பரிசாக தந்தவர்.

எட்டாவது படித்துக்கொண்டிருந்த என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை கொடுத்து படிக்கச்சொன்னவர்.

எனக்கு இதழியல் பாடம் நடத்தியவர். லேஅவுட் சொல்லிக்கொடுத்தவர்.. மற்றவர்களிடம் எப்படிப்பழக வேண்டும் என்பது உட்பட. (யாரையாவது அறிமுகப்படுத்தினால் சும்மா பார்த்துக்கொண்டே நிற்பேன். அவர்கள் சென்றபிறகு வணக்கம் சொல்ல வேண்டும் என்று அன்பாக சொல்லித் தந்தவர்)

பிலிம் சொஸைட்டிக்கு அழைத்துச்சென்று திரைப்பட ரசனையை வளர்த்தவர். டிவி விளம்பரங்களை விழப்புணர்வோடு பார்க்க கற்றுத் தந்தவர்.

இப்படி அவர் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார் . எனக்கு அன்றிருந்த அறிவுக்குறைவினால் நான் கொஞ்சம்தான் கற்றுக்கொண்டேன்.

இன்று சென்னையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கம் அமைத்தது, அதில் குழந்தைகளின் திரைப்பட ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடுவது.. இப்படி என் எல்லா முயற்சிகளுக்கும் விதையிட்டவர்.

இன்று என் மகனை இந்த சமூகத்திற்கு பயன்படுகிறவனாக வளர்க்க வேண்டும் என்ற அக்கறையை நான் இவரிடம் இருந்துதான் பெற்றேன். இப்படிப்பட்ட எண்ணங்களை அவர் வகுப்பில் விதைத்தார். அப்படி சில எண்ணங்கள்தான் இப்போது புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது.

இவரைப்பற்றி தெரியாதவர்கள் கூட இந்தப்புத்தகத்தை படிக்கும்போது இவர் ஆசிரியர் என்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு கல்வி முறையில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது...

நீ செய்வது தவறு அல்லது நீ சொன்னது தவறு என்பதை ஒருவரிடம்  நேரில் சொல்ல உங்களுக்கு மிகுந்த தைரியம் இருக்க வேண்டும். அரசுப்பணியில் இருந்து கொண்டு அரசின் தவறுகளை சொல்லும் தைரியத்தை அவருக்கு தமிழ்தான் கொடுத்திருக்க வேண்டும்.

எழுத்தில்தான் என்றில்லை நேரிலும் கூட தவறை சொல்லிவிடுவார்.  சங்கடப்படுவார்கள் என்பதைப்பற்றிய லேசான சங்கடத்தோடே கூட தவறை முகத்திற்கு நேரே எந்த இடத்திலும் சுட்டிக்காட்டிவிடுவார்.  இந்த இடத்திலும் அப்படித்தான்.

பல தனியார் பள்ளிகள் கல்விச்சாதனை செய்யாமல் கட்டணச்சாதனை செய்ததை அடித்துச்சொல்கிற கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தது, ‘பாடத்திட்டத்தில் ஊடகம்.’ சினிமாவை,பத்திரிக்கைகளை,டிவியை கல்விக்கு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி பேசும் இக்கட்டுரை என்னைக் கவர காரணம், இவை எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தி வாழ்க்கையை அவர் கற்றுத்தந்ததே.

மாணவர்கள் வீடுகளுக்கு, அவர்கள் படிக்கிறார்களா என்பதை இரவிலும் அதிகாலையிலும் சென்று பார்த்ததை பற்றிய கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன்.

நான் படிக்கும்போது இப்படி செய்யவில்லை. அப்படி வந்திருந்தால் நான் விழித்துக் கொண்டிருந்திருப்பேனா? அல்லது உறங்கிக் கொண்டிருந்திருப்பேனா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவர் ஆசிரியப்பணியில் அரசு போட்டுத்தந்த வட்டத்திற்குள் நின்று கொண்டு சதுரம் போட்டவர் என்பதற்கு நானே சாட்சி.

மாணவர்கள் மேல் கல்வியின் மேல் ஆர்வமுள்ள இளம் ஆசிரியர்களுக்கு இது ஒரு பாடப்புத்தகம். ஏனெனில் இவர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்.


என் ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழ்நடைப்பிழைகள் கட்டுரையை இன்னும் விரிவு செய்து தனியாக ஒரு புத்தகமாக கொண்டு வாருங்கள். அனைவருக்கும் பயன்படும்.

அதே போல் மாணவர்களுடனான உங்கள் அனுபவங்களையும் தயவு செய்து தனி நூலாக கொண்டு வர வேண்டும். அது அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்படும்.

( அகரம் பதிப்பகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் : தமிழாசிரியர் புத்தகத்தில் எழுத்துப் பிழைகள் வர விடலாமா?. ஐயாவின் உதவியையே நாடியிருக்கலாமே? )

முழு இரவையும் புத்தகத்தோடும் இனிய நினைவுகளோடும் செலவிட்ட மகிழ்ச்சியில்...


கிருஷ்ண. வரதராஜன்.

13 comments:

 1. Muthu baskar sir - he is one of the amazingly talented teacher...inspired many of us in various things...I had very few chances to be with him...thanks Varatharajan for those moments and raja you introduced me to these new world like film festival... Inspiring books ...and so many...

  ReplyDelete
 2. வணக்கம் kv சார்.வாழ்த்துகள்.! எனக்கெல்லாம் அவரிடம் படிக்க வாய்ப்பு கிடைக்காமால் போய்விட்டதே..என்ற வருத்தம் உண்டு.கலை, இலக்கியப் பயணத்தில் அவரின் பின் செல்கின்ற ஒரு பயணியாய், நான் பார்த்து வியக்கிற விஷயங்கள் அதிகம்..!
  நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்லுதல், ஈடுபடும் விசயத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றல், நேர்கொண்ட பார்வை, சமரசமில்லாக் கலை, இலக்கியப் பயணம், தன்னில் இளையோரையும் மதிக்கும் மாண்பு....இப்படி நான்(ம்) கற்றுக்கொள்ளவேண்டியவை அதிகம்..அவரின், உங்களின் சாதனைப் பயணங்கள் தொடரட்டும்...!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த புத்தக திருவிழாவிற்குள் உங்கள் ஆசிரிய அனுபவங்களை புத்தகங்களாக்கி விடுங்கள். நானே வெளியிடுகிறேன். அதுதான் ஐயாவை பின்பற்றும் நாம் செய்ய வேண்டியது.

   Delete
 3. முத்து நிலவன் ஐயா பற்றி படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் எழுத நிறைய இருக்கிறது. அடுத்த அடுத்த புத்தகங்களை அறிமுகப்படுதும்போது எழுதுகிறேன்.

   Delete
 4. அண்ணாவிற்கு இதைவிடப்பெரியவிருதை யார் கொடுக்க இயலும்
  தன்ஆசிரியரைப்பற்றி அந்த மாணவனால்தான்முழுமையாகக் கூற முடியும் எப்படிப்பட்டரெத்தினச்சுருக்கமான்சொற்கள் வட்டத்திற்குள் கட்டம் போட்டவர்ஆசிரியர் தன் பணியைமட்டும் செய்பவராக இருந்திருந்தால் ,இன்றுநீங்கள் பேசியிருக்கமாட்டீர்கள் அவர் தன் கடமையைகருத்துடன்செய்திருக்கிறார் தமிழ்நடைப்பிழையில் நான்மிக மிக மிகச்சிறியஅளவுகற்றுக்கொண்டேன்
  ,இன்னும் ஏறாளம் இருக்கிறது.அண்ணா நெற்கதிர் மாதிரி
  எவ்ளோ விடயம்..........ஆனாலும் தலைகனம் இருக்காது
  நன்றி,..நன்றி....நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சொல்ல ஏராளம் இருக்கிறது. தருணத்திற்காக காத்திருக்கிறேன். விரைவில் பிகிர்கிறேன்.

   Delete
 5. வணக்கம்
  ஐயா.

  கவிஞர் முத்து நிலவன் ஐயா பற்றி தங்களின் பார்வையில் மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் எப்படிப்பட்டவர் என்பதை தங்களின் எழுத்தில் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி .. நான் அவரை நேரில் பார்த்தேன் அவரின் கையால் அன்பளிப்பாக எனக்கு பல புத்தகங்களை தந்தார் ....இன்னும் படித்துக்கொண்டுதான் இருக்கேன்..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அவர் தந்த புத்தகங்கள்தான் என்னை எழுதவும் பேசவும் இயங்கவும் வைத்திருக்கிறது. நன்றி

   Delete
 6. சிறப்பு...

  ஐயாவின் தளம் மூலம் தான் உங்கள் தளம் அறிந்தேன்... தொடர்கிறேன்...

  ReplyDelete
 7. எனது நூல் பற்றிய உன் “அலையடித்த எண்ணங்களின் தொகுப்பு“ படித்து மகிழ்ந்து, எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன் வரது.
  உனக்குள் இருக்கும் படைப்பாளியை ஒளித்து வைத்துக்கொண்டு என்னதான் நீ வகுப்பெடுத்தாலும் அது “அலைகளில் மிதந்து“ தவிப்பதைக் கண்டேன்.. வாழ்க்கையை நீ வகுத்துக் கொண்டு வாழ்கிறாய் மகிழ்ச்சிதான். அந்தப் படைப்பாளியையும் அவ்வப்போது வெளியே விட்டுப் பார். வாழ்க்கை இன்னும் வசமாகும்.. அப்போது உன் நோக்கமும் நிசமாகும்

  ReplyDelete
  Replies
  1. விழுதுதான் என்கிறபோதே அதுவும் ஒருநாள் ஆல மரமாக மாறித்தானே ஆகவேண்டும். நிச்சயம் தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி

   Delete